விளையாட்டு

3 கட்டங்களாக நடக்கிறது 7-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி

செய்திப்பிரிவு

7-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி 3 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக 16 போட்டிகள் ஏப்ரல் 16-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகின்றன.

2-வது கட்ட போட்டிகள் மே 1 முதல் 12 வரை நடைபெறுகின்றன. இதை இந்தியாவில் நடத்த அனுமதி கிடைக்காதபட்சத்தில் 2-வது கட்ட போட்டிகள் வங்கதேசத்தில் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து இறுதி கட்டப் போட்டிகள் மே 13 முதல் ஜூன் 1-ம் தேதி வரை இந்தியாவில் நடத்தப்படவுள்ளன.

இந்திய நாடாளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளதால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து விட்டது. இதனால் ஐபிஎல் போட்டியை இந்தியாவுக்கு வெளியில் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

முன்னதாக 2009-ல் இதே போன்ற நிலை ஏற்பட்ட போது போட்டிகள் தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப் பட்டன. அதனால் இந்த முறையும் ஐபிஎல் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதற்கட்ட போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐபிஎல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மே 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையில் நடைபெறவுள்ள 2-வது கட்ட போட்டிகளை, வாக்குப் பதிவு முடிவடைந்த நகரங்களில் நடத்துவதற்கு அனுமதி அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அணுகியுள்ளது. ஒருவேளை அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனால் 2-வது கட்ட போட்டிகள் வங்கதேசத்தில் நடத்தப்படும்.

மே 12-ம் தேதி இறுதிக்கட்ட வாக்குப் பதிவு முடிந்தபிறகு எஞ்சிய லீக் போட்டிகள், பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டி ஆகியவை மே 13-ம் தேதி முதல் இந்தியாவில் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 16-ம் தேதி போட்டிகள் எதுவும் நடைபெறாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஐபிஎல் போட்டி எங்கு நடைபெறும், எப்போது நடைபெறும் என்பது தொடர்பான பரபரப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 1980 மற்றும் 1990-களில் இந்திய அணியின் முக்கிய ஆடுகளமாக ஐக்கிய அரபு அமீரகம் இருந்தது. ஆனால் 2000-ல் சூதாட்டப் புகார் எழுந்த பிறகு அங்கு செல்வதை இந்தியா நிறுத்திக் கொண்டது.

கடந்த 10 ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியா இரண்டு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT