விளையாட்டு

சூதாட்ட விவகாரத்தில் ஐசிசி-யின் செயல்பாடு அதிர்ச்சியாக இருந்தது: பிரண்டன் மெக்கலம் குற்றச்சாட்டு

பிடிஐ

தனது சக நாட்டு வீரரான கிறிஸ் கெயின்ஸ் மீதான குற்றச்சாட்டை சர்வதேச கிரிக்கெட் சங்கம் சரியாக கையாளவில்லை என நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கலம் குற்றம் சாட்டினார்.

லண்டனில் உள்ள மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மெக்கலம் பேசியதாவது:

கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது என் சக நாட்டு வீரரும் எனது ஹீரோவுமான கிறிஸ் கெயின்ஸ் ஆட்டத்தை முன்கூட்டியே தீர்மானிப்பது குறித்து என்னிடம் பேசினார். இதுதவிர நியூஸிலாந்து அணி இங்கிலாந்து சென்றபோது மீண்டும் என்னிடம் வந்து அதே போன்று கெயின்ஸ் பேசினார்.

கெயின்ஸ்

கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு எங்களது அணியினருடன் பேசிய சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரி ஜான் ரோட்ஸ், விளையாட்டில் சூதாட்டத்தில் ஈடுபடுமாறு யாராவது வீரர்களை வற்புறுத்தினால் தயக்கமின்றி தன்னைத் தொடர்பு கொள்ளலாம் எனக் கூறினார்.

இதையடுத்து கெயின்ஸ் என்னைத் தொடர்பு கொண்டது குறித்து அப்போது எங்கள் அணியின் கேப்டனாக இருந்த டேனியல் வேட்டோரியிடம் கூறினேன். பின்னர் இருவரும் சேர்ந்து ஜான் ரோட்ஸை சந்தித்து கெயின்ஸ் நடவடிக்கைகள் குறித்து கூறினோம்.

மேலோட்டமாக...

அப்போது ஊழல் தடுப்பு பிரிவில் இருந்த ஜான் ரோட்ஸ் எங்களது உரையாடலை பதிவு செய்யாமல் வெறும் பேப்பரில் எழுதினார். எனது குற்றச்சாட்டை தீவிரமாக விசாரிக்கவில்லை. நான் ஆதாரத்தை கொடுத்த போதிலும், மேலோட்டமாக இரு வரிகள் அடங்கிய அறிக்கையில் என்னிடம் கையெழுத்து வாங்கிவிட்டு அனுப்பிவிட்டார்.இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு சர்வதேச வீரரை, முன்னாள் வீரர் ஒருவர் இருமுறை சூதாட்டம் தொடர்பாக அணுகிய குற்றச்சாட்டை ஐசிசி வெகு எளிதாக எடுத்துக் கொண்டது.

மேலும் கெய்ன்ஸ் மீது நான் சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஊடகங்களுக்கு கசிந்துவிட்டன. இது சர்வதேச கிரிக்கெட் சங்கம் மீது வீரர்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழந்து விட்டது. இனியாவது சர்வதேச கிரிக்கெட் சங்கம், ஊழல் புகார் குறித்த குற்றச்சாட்டுக்களை பதிவு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு பிரண்டன் மெக்கலம் பேசினார்.

விடுவிப்பு

கெயின்ஸ் மீது மெக்கலம் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து லண்டனில் கடந்த ஆண்டு 9 மாதங்கள் விசாரணை நடைபெற்றது. இறுதியில் புகாரில் எவ்வித உண்மையும் இல்லை எனக் கூறி அந்த வழக்கிலிருந்து கெயின்ஸ் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT