விளையாட்டு

உலக செஸ்: கார்ல்சனுடன் மீண்டும் மோதுகிறார் ஆனந்த்

செய்திப்பிரிவு

ரஷ்யாவில் நடைபெற்று வரும் ‘கேண்டிடேட்ஸ்’ செஸ் தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துள்ளார். இதன் மூலம் வரும் நவம்பரில் நடைபெறவுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சனுடன் மீண்டும் மோதும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் ஆனந்த்.

ரஷ்யாவில் உள்ள கான்டி மான்சிய்ஸ்க் நகரில், கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. இத்தொடரின் 13வது மற்றும் பெனால்டிகேட் சுற்றில் இந்தியாவின் ஆனந்த் ரஷ்யாவின் செர்ஜி கர்ஜாகினை எதிர்கொண்டார். செர்ஜி கர்ஜாகின் உலகின் இளவயது கிராண்ட் மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், தன் 12-வது வயதில் உக்ரைனுக்காக விளையாடிய போது, கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார்.

இப்போட்டியில் ஆனந்த் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இருவருமே மிகுந்த கவனத்துடன் விளையாடியதால் போட்டி சுமார் ஐந்தரை மணி நேரம் நடந்தது. போட்டியின் 91-வது நகர்த்தலின் போட்டி போட்டியை டிராவில் முடித்துக் கொள்ள இருவரும் சம்மதித்தனர்.

இதையடுத்து, இத்தொடரில் 3 வெற்றி 10 டிராவுடன் 8 புள்ளிகள் பெற்ற ஆனந்த், ஒரு சுற்று மீதமிருக்கும் நிலையில் இத்தொடரில் சாம்பியன் ஆனார்.

விளாடிமிர் கிராம்னிக், ஆன்ட்ரெய்கின், மமேதியரோவ், ஆரோனியன், கர்ஜாகின் ஆகியோர் தலா 6.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இவர்கள் கடைசி மற்றும் 14-வது சுற்றில் வெற்றி பெற்றாலும் ஆனந்தை நெருங்க முடியாது. ஆகவே, ஆனந்த் சாம்பியன் ஆவது உறுதியாகிவிட்டது.

இதனால், வரும் நவம்பரில் நடக்கவுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், நடப்பு சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சனை மீண்டும் எதிர்கொள்ள உள்ளார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தோற்று மீண்டும் அதே வீரருடன் போட்டியில் பங்கேற்றவர்களில் (ரீ மேட்ச்) இரண்டாவது மூத்த வீரர் என்ற பெருமையை 44 வயதான ஆனந்த் இதன் மூலம் பெற்றுள்ளார். கடந்த 1946-க்குப் பிறகு நடைபெற்ற போட்டிகளில் விக்டர் கார்ச்னோய் (50) அனலோலி கார்போவுடன் 1981-ம் ஆண்டு மோதினார். இதுவே, வயதில் மூத்த வீரர் ஒருவர் பெற்ற இரண்டாவது வாய்ப்பாகும். 1961-ம் ஆண்டு மிகெய்ல் போட்வினிக், மிகெய்ல் தாலுடன் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றிருந்தாலும், அது நேரடி இரண்டாவது வாய்ப்பாகும்.

கார்ல்சனா, ஆனந்தா?

கடந்த 2013-ம் ஆண்டு நவம்பரில், சென்னையில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆனந்த், நார்வேயின் கார்ல்சனிடம் பட்டத்தை இழந்தார். மீண்டும் கார்ல்சனுடன் மோத வேண்டும் எனில், கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது. இப்போட்டியில் வென்று, மீண்டும் கார்ல்சனைச் சந்திக்கிறார் ஆனந்த். கார்ல்சனுடனான போட்டியில் ஒரு சுற்றில் கூட வெல்லாத ஆனந்த், 2 சுற்றுகள் மீதமிருக்கும் போதே தோற்றார். தற்போது, கேண்டிடேட்ஸ் போட்டியில் ஒரு சுற்றிலும் தோல்வியுறாமல், ஒரு சுற்று மீதமிருக்கையிலேயே சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

ஆனந்த் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் களமிறங்குவது இது 10-வது முறையாகும். இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இப்போட்டி ஆனந்துக்குக் கடினமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒரு பட்டத்துக்கு இரண்டாவது முறையாக மோதும்போது அல்லது ஒரே வீரருடன் இரண்டாவது முறை மோதும்போது, ஆனந்த் கடும் சவாலை அளிக்கத் தவறியதில்லை. ஆக, இம்முறை ஆனந்த் கார்ல்சனை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஸ்பரோவ் கருத்து

முன்னாள் உலக சாம்பியன் கேரி காஸ்பரோவ் இது தொடர்பாக தன் ட்விட்டர் சமூக இணையதளத்தில், “ஆனந்த்-கார்ல்சன் மோதலில் கார்ல்சனே வெற்றி பெறுவார் என்பது தெளிவான ஒன்று. ஆனால், செஸ் வரலாற்றில், மறு போட்டிகளில் அவரவரின் ஆற்றலே வெற்றியைத் தீர்மானிக்கின்றன. முதல் போட்டியின் முடிவே இரண்டாவது போட்டியில் ஏற்படுவது அரிதான ஒன்று.

SCROLL FOR NEXT