விளையாட்டு

வைடு கொடுக்காததால் வெறுப்பைக் காட்டிய ரோஹித் சர்மாவுக்கு அபராதம்

இரா.முத்துக்குமார்

ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முக்கியக் கட்டத்தில் நடுவர் வைடு கொடுக்காததால் ரோஹித் சர்மா நேரடியாக தனது எதிர்ப்பையும் ஏமாற்றத்தையும் தெரிவித்ததற்காக 50% அவரது ஆட்டத்தொகையிலிருந்து செலுத்துமாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மும்பைக்கு வெற்றி இலக்கு 161. கடைசி 4 பந்துகளில் வெற்றிக்குத் தேவை 11 ரன்கள். இந்நிலையில் ஜெய்தேவ் உனட்கட் வீசிய பந்துக்கு ரோஹித் சர்மா ஆஃப் ஸ்டம்ப் நோக்கி நகர்ந்து வந்தார், இதனைப் பார்த்த உனட்கட் மேலும் வைடாக பந்தைக் கொண்டு சென்றார், பந்து வைடுக்கான கோட்டைத் தாண்டியும் சென்றதைக் கண்ட ரோஹித் பந்தை ஆடாமல் விட்டார். ஆனால் நடுவர் எஸ்.ரவி வைடு கொடுக்கவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த ரோஹித் சர்மா மிகவும் ஆவேசமாக நடுவரை நோக்கி சில செய்கைகளையும் செய்து அவருடன் வாக்குவாதமும் செய்தார், ஸ்கொயர் லெக் அம்பயர் தலையீட்டில் பிரச்சினை முடிந்தது.

ஆனால் ரோஹித் சர்மாவின் நடத்தை விதிமுறை பிரிவு 2.1.5-ன் கீழ் ஏற்று கொள்ள முடியாதது என்று அறிவிக்கப்பட்டு ஜவகல் ஸ்ரீநாத் ரோஹித் சர்மாவுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

விதிமுறை 2.1.5 கூறுவது என்னவெனில்,

1. நடுவர் தீர்ப்புக்கு எதிராக அளவுக்கதிகமாக ஏமாற்றம் தெரிவிப்பது.’

2. இதனால் ஆட்டம் தடைபடுவது, அல்லது அவுட் கொடுத்த பிறகு வெளியேற தாமதம் செய்வது.

3. நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு தலையை ஆட்டுவது.

4. எல்.பி. என்று தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு மட்டையின் உள்விளிம்பை பார்ப்பது.

5. விக்கெட் கீப்பர் கேட்ச் என்று தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு பேடைக் காண்பிப்பது அல்லது தோள்பட்டையில் பந்து பட்டது போல் தேய்த்துக் காட்டுவது.

6. நடுவரிடமிருந்து தொப்பியைப் பிடுங்கிச் செல்வது.

7. டிவி நடுவரிடம் ரெஃபரல் செய்வது

8. நடுவர் தீர்ப்பை எதிர்த்து அவருடன் நீண்ட நேரம் வாதத்தில் ஈடுபடுவது.

நேற்று ரோஹித் சர்மா இந்தப் பிரிவின் கீழ்தான் விசாரிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT