ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் 3 மாற்றங்கள் இருந்தது. சாமுவேல் பத்ரி, சச்சின் பேபி, ஸ்டூவர்ட் பின்னி ஆகியோருக்கு பதிலாக வாட்சன், மன்தீப் சிங், அனிகெட் சவுத் ஆகியோர் இடம் பெற்றனர்.
மும்பை அணியில் காயம் காரணமாக ஹர்பஜன் சிங் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக கரண் சர்மா களமிறக்கப்பட்டார். முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டி வில்லியர்ஸ் 27 பந்துகளில், தலா 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 43 ரன்களும், பவன் நெகி 23 பந்துகளில் 35 ரன்களும், கேதார் ஜாதவ் 28 ரன்களும் எடுத்தனர்.
விராட் கோலி 20, மன்தீப் சிங் 17, டிரெவிஸ் ஹெட் 12, வாட்சன் 3 ரன்கள் சேர்த்தனர். மும்பை அணி தரப்பில் மெக்லீனகன் 3, கிருனல் பாண்டியா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். இதையடுத்து 163 ரன்கள் இலக்குடன் மும்பை பேட் செய்தது.
அனிகெட் சவுத்ரி வீசிய முதல் பந்திலேயே பார்த்தீப் படேல் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா, ஜாஸ் பட்லருடன் இணைந்து நிதானமாக விளையாடினார். பவர் பிளேவில் 55 ரன்கள் சேர்க்கப்பட்டது. ஜாஸ் பட்லர் 21 பந்துகளில் 33 ரன்களும், ராணா 28 பந்துகளில் 27 ரன்களும் சேர்த்த நிலையில் சீரான இடைவேளையில் பவன் நெகி பந்தில் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய பொலார்டு 13 பந்தில் 17 ரன்கள் எடுத்த நிலையில் யுவேந்திரா சாஹல் பந்தில் வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கிருனல் பாண்டியா 2 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய கரண் சர்மா 9 ரன்னில் வாட்சன் பந்தில் நடையை கட்டினார். கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா ஜோடி அதிரடியாக விளையாடியது. அனிகெட் சவுத்ரி வீசிய 18-வது ஓவரில் பாண்டியா ஒரு சிக்ஸர் விளாச இந்த ஓவரில் 12 ரன்கள் சேர்க்கப்பட்டது.
அர்விந்த் வீசிய அடுத்த ஓவரில் ரோஹித் சர்மா, சிக்ஸர் பறக்கவிட்டார். இந்த ஓவரில் 11 ரன்கள் சேர்க்கப்பட மும்பை அணியின் வெற்றி எளிதானது. கடைசி ஓவரில் 7 ரன்களே தேவைப்பட்டது. வாட்சன் வீசிய முதல் பந்து வைடாக அடுத்த 4 பந்துகளில் 4 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் பரபரப்பு அதிகமானது. 5-வது பந்தை ரோஹித் சர்மா பவுண்டரிக்கு விரட்ட மும்பை அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ரோஹித் சர்மா 37 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 56 ரன்களும், ஹர்திக் பாண்டியா 14 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை அணிக்கு இது 8-வது வெற்றியாக இருந்தது. அதேவேளையில் பெங்களூரு 8-வது தோல்வியை சந்தித்தது.