விளையாட்டு

இன்று 3-வது ஒருநாள் போட்டி: ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா

செய்திப்பிரிவு

இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையேயான 3-வது ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் ஆக்கும் முனைப்பில் தோனி தலைமையி லான இந்திய அணி களமிறங்குகிறது.

இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. தொடரை 2-0 என கைப்பற்றி விட்டதால் இன்றைய ஆட்டத்தில் ஒரு சில வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என தெரிகிறது.

இரு ஆட்டத்திலும் கே.எல்.ராகுல், அம்பாட்டி ராயுடு ஆகியோர் மட்டுமே அதிக நேரம் பேட் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இதனால் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக இவர்களுக்கு ஓய்வு கொடுக்கப் படக்கூடும் அல்லது இவர்களின் பேட்டிங் வரிசையில் மாற்றம் இருக்கக்கூடும்.

இருவருக்கும் ஓய்வு வழங்கும் பட்சத்தில் பையாஸ் பாஸல், மன்தீப்சிங் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்க வாய்ப்புள்ளது. இதேபோல் பரிந்தர் ஷரண், தவால் குல்கர்னி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரில் யாராவது ஒருவரை அமரவைத்து விட்டு அந்த வாய்ப்பை ஜெயதேவ் உனத்கட் அல்லது ஆல்ரவுண்டர் ரிஷி தவண் ஆகியோருக்கு வழங்கும் முடிவையும் அணி நிர்வாகம் எடுக்கக்கூடும்.

இதேபோல் சுழற்பந்து வீச்சில் அக்ஸர் படேலுக்கு பதில் ஜெயந்த் யாதவ் இடம் பெற வாய்ப்பு உள்ளது. சிறப்பாக செயல்பட்டு வரும் யஜூவேந்திரா ஷாகல் இன்றும் ஜிம்பாப்வே வீரர்களுக்கு சவாலாக இருப்பார்.

இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெறும் பட்சத்தில் 3-வது முறையாக ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் செய்த பெருமையை பெறும். கடந்த 2013 மற்றும் 2015-ம் ஆண்டு தொடரிலும் ஜிம்பாப்வே அணியை இந்தியா ஒயிட்வாஷ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நேரம்: பகல் 12.30

ஒளிபரப்பு: டென் ஸ்போர்ட்ஸ்

SCROLL FOR NEXT