விளையாட்டு

தரம்சலா பிட்ச் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகம்

இரா.முத்துக்குமார்

தரம்சலாவில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்று பிட்ச் தயாரிப்பாளர் சுனில் சவுகான் தெரிவித்துள்ளார்.

“பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைமைகள் வேகப்பந்து வீச்சுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது. ஆனால் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆனது போல் மிகுதியாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகம் என்று கூற முடியாது, மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பந்துகள் ஸ்விங் ஆகும்.

5 நாட்கள் ஆட்டம் நீடிக்குமாறு உண்மையான ஆட்டக்களத்தை தயாரிப்பதே நோக்கம். அனைவருக்கும் இந்தப் பிட்சில் சாதக அம்சங்கள் உள்ளன. முதல் 2 நாட்களுக்கு வேகப்பந்து வீச்சு ஆதிக்கம் இருக்கும். கடைசி 2 நாட்கள் ஸ்பின்னர்களுக்கு உதவிபுரிய வாய்ப்புள்ளது” என்றார்.

மேலும் முதல் 3 டெஸ்ட் போட்டிகள் போல் அல்லாமல் எட்ஜ் எடுத்தால் பந்து ஸ்லிப் பீல்டர் கைக்கு சவுகரியமான உயரத்தில் செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ஆஸ்திரேலிய அணி ஓகீஃபுக்குப் பதிலாக ஜேக்சன் பேர்ட் விளையாட வாய்ப்புள்ளது, இதனால் ஹேசில்வுட், பேட் கமின்ஸ், ஜேக்சன் பேர்ட் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற வாய்ப்பு, அதே போல் இந்திய அணியில் மீண்டும் உடல்தகுதி பெற்ற மொகமது ஷமி இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் கருண் நாயரை வைத்துக் கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டால் ஒருவேளை இசாந்த் சர்மாவுக்குப் பதிலாக மொகமது ஷமி ஆட வாய்ப்புள்ளது.

மேலும் புவனேஷ் குமாரை அணியில் சேர்ப்பதும் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது.

SCROLL FOR NEXT