இரு போட்டிகளில் தோல்வி கண்டதற்காக ஒரு வீரரை நீக்குவது நியாயமற்றது என இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
மொஹாலியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. கடைசிக் கட்டத்தில் இஷாந்த் சர்மாவின் மோசமான பந்துவீச்சு காரணமாக இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது. அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தோனி மேலும் கூறியது:
அடிக்கடி வீரர்களை மாற்றுவது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் தோற்றதற்காக உடனடியாக ஒரு வீரரை மாற்றுவது நியாமற்றது. ஒரு சில தோல்விகளுக்காக அனைத்து பௌலர்களையும் அணியை விட்டு தூக்கியெறியுங்கள் எனக்கூறுவது நல்லதல்ல. வீரர்களை அணியில் தக்கவைத்துக் கொள்வது முக்கியமானது. அணியில் உள்ள வீரர்கள் நல்ல அனுபவத்தைப் பெறுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். அவர்கள் அனைவருமே திறமையான வீரர்கள்தான். எனவே அவர்கள் பின்னடைவில் இருந்து மீள்வதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.
48-வது ஓவரை வீசிய இஷாந்த் சர்மா 30 ரன்களை வாரி வழங்கினார். அதனால் இந்தியா தோல்வி கண்டது. அந்த ஓவரை வீசுவதற்கு இஷாந்த் சர்மாவை அழைத்த தனது முடிவு சரியானதுதான் எனக் கூறிய தோனி, “அணி வீரர்களின் செயல்பாடுகளை நீங்கள் பார்த்தீர்களானால், ஒட்டுமொத்த அணியையே மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படலாம். சில பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கவில்லை. சில பௌலர்கள் ரன்களைக் கொடுத்துவிட்டனர். இரு அணியின் பௌலர்களையும் ஒப்பிட்டால், ஆஸ்திரேலிய பௌலர்கள் ரன்களைக் கொடுத்தபோதும், நம்முடைய பௌலர்களைவிட சிறப்பாகவும் துரிதமாகவும் பந்துவீசியதை அறிய முடியும்.
அணி தேர்வு குறித்து பயிற்சியாளரிடம் மட்டுமே பேச முடியும். செய்தியாளர்கள் சந்திப்பில் அதுபற்றி பேச முடியாது. அணியில் இடம்பிடிக்கக் காத்திருக்கும் புதிய பௌலர்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். ஒரு பௌலர் அணியில் இருந்து நீக்கப்படும்போது மக்கள் அவரை மறந்துவிட்டு, புதிய பௌலரை பற்றி பேச ஆரம்பித்து விடுகிறார்கள். அணியில் இருக்கும் ஒரு வீரருக்கு இக்கட்டான நேரத்தில் கை கொடுக்க வேண்டும் என எப்போதுமே நினைக்கிறேன். எனவே அணியில் வாய்ப்பை இழக்கும் வீரர்களுக்கும், புதிய வீரர்களுக்கும் ஒரே மாதிரியான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்" என்றார்.