ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வின் ஏமாற்றம் 7-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. துப்பாக்கி சுடும் போட்டி, வில்வித்தை ஆகியவற்றில் இந்திய வீரர்கள் நேற்று தோல்வியைத் தழுவினர்.
ரியோ ஒலிம்பிக் போட்டி தொடங்கி 7 நாட்களான நிலையில் இந்திய அணி இதுவரை ஒரு பதக்கம்கூட வெல்லாமல் ஏமாற்றம் அளித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் ஆகிய போட்டிகளில் இந்திய வீரர்கள் நேற்றும் ஏமாற்றம் அளித்தனர்.
ஆண்களுக்கான 50 மீட்டர் ஏர் ரைபிள் புரோன் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய வீரர்களான ககன் நாரங்கும், செயின் சிங்கும் பங்கேற்றனர். இப்போட்டியில் ககங் நாரங் 623.1 புள்ளிகளை பெற்று 13-வது இடத்தையும், செயின் சிங் 619.6 புள்ளிகளைப் பெற்று 36-வது இடத்தையும் பிடித்தனர். இதன் மூலம் அவர்கள் தகுதிச் சுற்றிலேயே வெளியேறினர். இப்போட்டியில் ஒரு கட்டத்தில் ககன் நாரங் 6-வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறவுள்ள 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் போட்டியில் அவர் மீண்டும் பங்கேற்க உள்ளனர்.
ஆண்களுக்கான வில்வித்தை போட்டியில் நேற்று நடந்த கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் அட்டானு தாஸ், கொரிய வீரர் லீ ஷியாங்கை எதிர்த்து ஆடினார். பலத்த மழைக்கு நடுவே நடைபெற்ற இப்போட்டியில் கொரிய வீரர் லீ ஷியாங் 6-4 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்றார். இதன்மூலம் இந்த ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில் பதக்கம் பெறும் இந்தியாவின் கனவு தகர்ந்தது.
கிடாம்பி வெற்றி
மற்ற போட்டிகள் கைவிட்ட நிலையில் பாட்மிண்டன் போட்டிம் இந்தியாவுக்கு நேற்று சற்று ஆறுதல் அளித்தது. ஆண்களுக்கான பாட்மிண்டன் போட்டியின் லீக் ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி காந்த், நேற்று மெக்சிகோவின் லினோ முபோசை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் காந்த், 21 11 21 17 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார். இப்போட்டி 41 நிமிடங்கள் நடைபெற்றது.
காந்த் வெற்றிபெற்ற அதே நேரத்தில் பெண்களுக்கான இரட்டையர் பிரிவு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஜுவா லா கட்டாவும், அஸ்வினி பொன் னப்பாவும் தோல்வியைத் தழுவி னர். இவர்களை நெதர்லாந்தின் பெய்க், முஸ்கென்ஸ் ஜோடி 16-21 21-16 17-21 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.