லோதா குழுவின் சீர்த்திருத்த பரிந்துரைகளை அமல்படுத்த இடையூறாக இருந்த பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை நீக்கம் செய்து உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
மேலும், பிசிசிஐ சீர்திருத்தத்தை நோக்கமாகக் கொண்ட தம் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த தடையாக இருந்ததற்காக, அனுராக் தாக்கூர் மீது நீதிமன்ற அவதிப்பு வழக்கு விசாரணை மேற்கொள்ளவும் முடிவு செய்து, அவர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் மற்றும் செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை பதவி நீக்கம் செய்ததுடன், அந்தப் பதவிகள் நிரப்பப்படும் வரை நிர்வாகக் குழு மூலம் பிசிசிஐ இயங்கும் என்று தெரிவித்தது.
மேலும், புதிய நிர்வாகிகளுக்கான பெயர்களைப் பரிந்துரைப்பது, நியமனம் செய்வது உள்ளிட்ட நடைமுறைகளை மேற்கொள்ளவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக இம்மாதம் 19-ம் தேதி நடைபெறும் விசாரணையின்போது கவனிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், லோதா குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளை பிசிசிஐ-யின் அனைத்து நிர்வாகிகளும், அதன் மாநில அமைப்புகளும் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அமர்வு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
லோதா பரிந்துரைகள் அமல்படுத்த தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
முன்னதாக, பிசிசிஐ-யின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் முன்னாள் நீதிபதி லோதா தலைமையிலான குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்த குழுவின் பரிந்துரைகளில் முக்கியமானவையான ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்குரிமை, 70 வயதுக்கு மேற்பட்டோர் நிர்வாக பதவிகளில் இருக்கக்கூடாது. தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளில் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கக் கூடாது ஆகியவற்றை அமல்படுத்துவதில் பிசிசிஐ தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையின் போது, லோதா குழுவின் பரிந்துரைகளை முழுவதுமாக அமல்படுத்துகிறோம் என மாநில கிரிக்கெட் சங்கங்கள் உறுதிமொழி கடிதம் அளிக்கும் வரை அவர்களுக்கு எந்தவித நிதி உதவியும் அளிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக, உச்ச நீதிமன்றத்தில் லோதா குழு, கடந்த நவம்பர் மாதம் 14-ம் தேதி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில், விதிமுறைகளுக்குப் புறம்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் பதவி வகித்து வரும் அதிகாரிகளை நீக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
மேலும் பிசிசிஐ அமைப்பின் நிர்வாகச் செயல்பாடுகளை வழிநடத்தும் பார்வையாளராக முன்னாள் உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளையை நியமிக்க வேண்டும். பிசிசிஐ-யின் வரவு, செலவுகளை ஆய்வு செய்ய ஒரு தணிக்கையாளரையும், நிர்வாகக் குழு அலுவலர்களையும் நியமிக்க அவருக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் லோதா குழு தெரிவித்தது.
பின்னர், லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தும் விவகாரத்திற்கு பின்னடைவு ஏற்படுத்த ஐசிசி-யிடமிருந்து கடிதம் பெற பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் முயற்சி செய்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அனுராக் தாக்கூருக்கு நீதிமன்ற அவமதிப்பு எச்சரிக்கை விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.