தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் ஃபாக்னர் விலகியுள்ளார். அவருடைய முழங்காலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக அவர் விலகியிருக்கிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின் போது ஃபாக்னரின் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்குப் பதிலாக மற்றொரு ஆல்ரவுண்டரான மோசஸ் ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்று தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் ஃபாக்னர் இடம்பெற்றிருந்த நிலையில், இப்போது அவருக்குப் பதிலாக கேன் ரிச்சர்ட்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய தேர்வுக்குழு தலைவர் ஜான் இன்வெராரிட்டி கூறுகையில், “ஹென்ரிக்ஸ் சமீபத்திய போட்டிகளில் பேட்டிங், பௌலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதனால் ஃபாக்னர் இடத்துக்கு ஹென்ரிக்ஸ் பொருத்தமானவராக இருப்பார்” என்றார். ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு இன்று புறப்படுகின்றனர். காயமடைந்துள்ள ஷான் மார்ஷ் தென் ஆப்பிரிக்கா செல்லவில்லை.
அவர் விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கும் வரை தொடர்ந்து சிகிச்சை பெறுவதற்காக பெர்த்திலேயே இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் ஜாக்சன் பேர்டும் தென் ஆப்பிரிக்கா செல்லவில்லை. அவர் முழுவது மாக குணமடையும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்கா செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய-தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 12-ம் தேதி செஞ்சுரியனில் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து 2-வது போட்டி பிப்ரவரி 20-ம் தேதி போர்ட் எலிசபெத்திலும், 3-வது போட்டி மார்ச் 1-ம் தேதி கேப்டவுனிலும் தொடங்குகின்றன.