விளையாட்டு

சகவீரர் ஊக்க மருந்தில் சிக்கியதால் 4X100 மீ ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை இழந்தார் உசைன் போல்ட்

ஏபி

2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் உசைன் போல்ட்டுடன் 4X100மீ பந்தயத்தில் ஓடிய நெஸ்டா கார்ட்டர் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதாக நிரூபிக்கப்பட்டதால் உசைன் போல்ட் தங்கப்பதக்கத்தை இழந்தார்.

நெஸ்டா கார்ட்டர் அளித்த சிறுநீர் மாதிரிகளில் தடை செய்யப்பட்ட ‘மெதில்ஹெக்சானியமின்’ என்ற ஊக்கமருந்து இருந்தது மறு ஆய்வின் போது தெரியவந்ததாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது, இதனையடுத்து ‘ஜமைக்கா தடகள அணி தகுதியிழப்பு செய்யப்படுகிறது’ என்று ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் உசைன் போல்ட்டின் 9 ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தில் தற்போது ஒன்று குறைந்துள்ளது.

முதலில் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில்தான் உசைன் போல்ட் 100, 200 மற்றும் 4X100 மீ ஓட்டங்களில் 3 தங்கங்களை வென்று சாதனை புரிந்தார். அதன் பிறகு 2012, 2016 ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்த ‘டிரிபிள்’ சாதித்து மொத்தம் 9 தங்கங்களுடன் ஒலிம்பிக்கிலிருந்து விடை பெறுவதாக அறிவித்தார் உசைன் போல்ட்.

தற்போது இந்த முடிவினால் உசைன் போல்ட்டின் தங்கப்பதக்க எண்ணிக்கை 8ஆக குறைந்துள்ளது.

இந்நிலையில் டிரினிடாட் அண்ட் டொபாகோ அணிக்கு தங்கமும், ஜப்பானுக்கு வெள்ளியும், பிரேசிலுக்கு வெண்கலமும் கிடைக்கவுள்ளது.

கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஐஓசியிடம் வீடியோ கான்பரன்சிங்கில் கார்ட்டர் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. இந்த குறிப்பிட்ட மெதில்ஹெக்சானியமின் எவ்வாறு தனது உணவிலோ அல்லது மருந்திலோ கலந்தது என்று கார்ட்டர் தனக்கு தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். 2008 ஒலிம்பிக்கிற்கு முன்பு செல்டெக், நைட்ரோ டெக் போன்றவற்றை கார்ட்டர் எடுத்துக் கொண்டுள்ளார். ஆனால் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து இருந்ததாக ஒரு போதும் சோதனையில் தெரியவில்லை. மெதில்ஹெக்சனியமின் 2008-ம் ஆண்டு தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்துகள் பட்டியலில் இல்லை. ஆனால் பிற தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்துகள் செய்யும் அதே வேலையை இதுவும் செய்யக்கூடியதாகையால் ஊக்கமருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதாக முடிவு கட்டப்பட்டுள்ளது.

இந்தத் தடை, பதக்கப்பறிப்பை எதிர்த்து விளையாட்டுத்துறை சர்வதேச நீதிமன்றத்தில் கார்ட்டர் மேல்முறையீடு செய்யலாம்.

SCROLL FOR NEXT