இலங்கை அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
சார்ஜாவில் நேற்று முடிவடைந்த 3-வது டெஸ்ட் போட்டியில் 302 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடி பாகிஸ்தான் 57.3 ஓவர்களில் இந்த ரன்களை எட்டி வெற்றி பெற்றது. டிராவில்தான் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் வெற்றி பாகிஸ்தான் வசமானது. முக்கியமாக பாகிஸ்தான் பேட்ஸ்மேன் அசார் அலி 103 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 172 ஓவர்களில் 428 ரன்கள் குவித்தது. பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் 341 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.
முதல் இன்னிங்ஸில் 87 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 71 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் 5-வது நாளான நேற்று ஆட்டத்தைத் தொடர்ந்த இலங்கை மதிய உணவு இடைவேளையின்போது 214 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து 302 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் அணி தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. மொத்தம் 59 ஓவர்கள் மட்டுமே இருந்ததால் பாகிஸ்தான் வீரர்கள் விக்கெட்டை காப்பாற்றி ஆட்டத்தை டிரா செய்ய முயற்சிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
பாகிஸ்தானின் தொடக்கம் சற்று தடுமாற்றமாகவே அமைந்தது. குர்ரம், அகமது ஷெசாத் ஆகியோர் தலா 21 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து அசார் அலி, யூனிஸ் கான் ஜோடி சேர்ந்தனர். ஒருமுனையில் அசார் அலி சிறப்பாக விளையாடி வந்தாலும், மறுமுனையில் யூனிஸ்கான் 29 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த சர்ப்ராஸ் அகமது தாக்குப் பிடித்து விளையாடி 48 ரன்கள் எடுத்தார். அப்போது பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. பின்னர் அசார் அலியுடன் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். சதமடித்த அசார் அலி 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அப்போது பாகிஸ்தான் அணி ஏறக்குறைய வெற்றியை நெருங்கி 295 ரன்களை எட்டியிருந்தது. மிஸ்பா-உல்-ஹக் அரைசதம் கடந்தார்.
ஆட்டம் முடிய 1.3 ஓவர்களே இருந்த நிலையில் பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 302 ரன்களை எட்டி வெற்றி பெற்றது. மிஸ்பா-உல்-ஹக் 68 ரன்களுடனும், ஆசாத் சாஃபிக் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. முன்னதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. 2-வது டெஸ்ட்டில் இலங்கை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இலங்கை வீரர் மேத்யூஸ் தொடர் நாயகனாகவும், பாகிஸ்தான் வீரர் அசார் அலி ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.