இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் இன்று சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி புனே சிட்டி அணியை எதிர்கொள்கிறது.
சென்னை நேரு மைதானத்தில் இரவு 7 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையே புனேயில் நடை பெற்ற முதல் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. எனவே இந்த ஆட்டம் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முக்கியமாக சென்னை அணியில் நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ள இலானோவின் சிறப்பான ஆட்டத்தை உள்ளூர் ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் ரசித்து வருகின்றனர். எனவே இந்த ஆட்டத்திலும் இலானோ குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சென்னை நேரு மைதானத்தில் சென்னை அணி பங்கேற்கும் 7 ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. இப்போது நடைபெறுவது 5-வது ஆட்டமாகும். சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் 2 1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர் ஸையும், இரண்டாவது ஆட்டத் தில் 5 1 என்ற கணக்கில் மும்பை சிட்டியையும் தோற்கடித்தது.
3 வது ஆட்டத்தில் கொல்கத்தா அணியுடன் 1 1 என்ற கோல் கணக்கிலும், நான்காவது ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடட் அணியுடன் 2 2 என்ற கணக்கிலும் சமன் செய்தது.
சென்னை அணி இதுவரை மொத்தம் 8 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றி, 4 டிரா, 1 தோல்வியுடன் 13 புள்ளிகள் பெற்று 2 வது இடத்தில் உள்ளது. புனே சிட்டி 8 ஆட்டத்தில் 3 வெற்றி, 3 டிரா 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4 வது இடத்தில் உள்ளது.
சென்னையில் இதுவரை நடைபெற்ற 4 ஆட்டங்களில் முதல் இரு ஆட்டங்களில் சென்னை அணி வெற்றி பெற்றது. அடுத்த இரு ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.