கான்பூரில் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், இந்தியாவுக்கு 264 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, மேற்கிந்திய தீவுகளை முதலில் பேட் செய்ய அழைத்தது.
அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் சார்லஸ் 11 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு துவக்க ஆட்டக்காரரான பவலும், சாமுவேல்ஸும் அணிக்கு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தினர்.
பவல் 70 ரன்களையும், சாமுவேல்ஸ் 71 ரன்களையும் சேர்த்து, அணியின் ரன் எண்ணிக்கையை வெகுவாக கூட்டினர்.
அவர்களைத் தொடர்ந்து டெரன் பிராவோ நிதானமான ஆட்டத்தைக் கடைபிடித்தார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் சேர்த்தார். அவருக்கு பக்கபலமாக இருந்த சமியும் ஆட்டமிழக்காமல் 37 ரன்கள் எடுத்தார்.
சைமன்ஸ் 13 ரன்களிலும், துவைன் பிராவோ 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், மேற்கிந்திய தீவுகள் தனது இன்னிங்ஸ்சில், 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் சேர்த்தது.
இந்திய தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், புவனேஸ்வர் குமார், சமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய - மேற்கிந்திய தீவுகள் அணிகள் 1-1 என சமநிலையில் இருக்கின்றன. இன்றைய போட்டி, தொடரை யார் கைப்பற்றுவர் என்பதை நிர்ணயிக்கும்.