ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்று வரும் ஜூரிச் சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் முதல் வெற்றியைப் பதிவு செய்தார்.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இஸ்ரேலின் போரிஸ் கெல்பான்டை ஆனந்த்எதிர்கொண்டார். இதில் கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த் 36 நகர்த்தல்களுக்குப் பின் கெல்பான்டை வீழ்த்தினார்.
மொத்தம் 6 வீரர்கள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் 4-வது சுற்றில்தான் ஆனந்த் முதல் வெற்றியைப் பெற்றுள்ளார். இதன் மூலம் மொத்தம் 3 புள்ளிகளுடன் அவர் 3-வது இடத்தில் உள்ளார். முன்னதாக நடைபெற்ற முதல் மூன்று சுற்று ஆட்டத்தில் இரண்டில் தோல்வியடைந்த ஆனந்த், ஒரு ஆட்டத்தை டிரா செய்தார்.
உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் நேற்று தனது 3-வது வெற்றியைப் பெற்றார். இதன் மூலம் அவர் மொத்தம் 7 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.