கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிடுவதற்காக தான் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஐதராபாத் கிரிக்கெட் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது அசாருதீன் கடந்த வாரம் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த மனுவுடன், தனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி பிசிசிஐ வெளியிட்ட உத்தரவின் நகலை அவர் இணைக்கவில்லை. இதன் காரணமாக தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக அசாருதீன் தாக்கல் செய்த மனுவை ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் நிராகரித்தது. இந்நிலையில் இதனை எதிர்த்து ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் அசாருதீன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுபற்றி நிருபர்களிடம் கூறிய அசாருதீன், “ஐதராபாத் கிரிக்கெட் சங்க தேர்தலில் ஆரம்பம் முதலே பல முறைகேடுகள் நடந்துள்ளன. என் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து நீதிமன்றம் ஏற்கெனவே என்னை விடுவித்துவிட்டது. இது தொடர்பான கோர்ட் ஆணையை நான் ஏற்கெனவே வழங்கியுள்ளேன். இந்நிலையில் பிசிசிஐயில் எனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி வெளியிட்ட உத்தரவின் நகலை வேட்பு மனுவுடன் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்பது முறையல்ல. லோதா கமிட்டியின் பரிந்துரைகள் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத் தேர்தலில் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று கருதுகிறேன்” என்றார்.
முன்னதாக சூதாட்ட புகாரில் சிக்கியிருந்த அசாருதீனுக்கு பிசிசிஐ 2000-ம் ஆண்டில் தடை விதித்திருந்தது. அந்தத் தடை 2012-ம் ஆண்டில் நீக்கப்பட்டது.