விளையாட்டு

காயங்களால் என் வாய்ப்புகள் பறிபோனது: மீண்டும் இந்திய அணியில் நுழைய ராயுடு உறுதி

வி.வி.சுப்ரமணியம்

அம்பாத்தி ராயுடுவின் மிகப்பெரிய குறிக்கோள் மீண்டும் இந்திய அணியில் நுழைவதாகும். இதனை அவர் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதுவரை 34 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆடிய அம்பாத்தி ராயுடுவின் சராசரி 50.23 என்பது கவனிக்கத்தக்கது. இதில் 2 சதங்கள் 6 அரைசதங்கள் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 76.28. மொத்தம் 1055 ரன்களில் 90 பவுண்டர்கள் 13 சிக்சர்களை அடித்துள்ளார்.

ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழில் அவர் கூறியிருப்பதாவது:

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 8 சீசன்களில் ஆடி 3 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றதும், இருமுறை சாம்பியன்ஸ் லீகில் வென்றதும் பெருமை அளிக்கிறது.

ஒரு கிரிக்கெட் வீரருக்கு மிகச்சிறந்த ஆண்டுகள் என்பது ஒரு வீரரின் 28 வயது முதல் 35 வயது வரையே. எனவே எனக்கு சிறப்பான ஆண்டுகள் காத்திருக்கிறது என்றே என் உள்ளுணர்வு தெரிவிக்கிறது. சமீப காலங்களில் சீரான முறையில் ஆடி வருகிறேன், எனவே ஒரு பேட்ஸ்மெனாக நான் என் உச்சத்தில் இருப்பதாகவே கருதுகிறேன்.

பல்வேறு மட்டங்களில் பெரிய தொடர்களுக்காக இந்திய அணியில் இடம்பெறுவதற்காகவே நான் என்னை உந்திக் கொள்கிறேன். இந்த வகையில் ஐபிஎல் போட்டியில் என் பங்களிப்பு எனக்கு நிறைவையே அளிக்கிறது.

என்னுடைய ஆக்ரோஷத்தை என் பேட்டிங் மட்டிலும் குறுக்கியுள்ளேன், அதைத்தாண்டி செல்வதில்லை. ஆக்ரோஷமே எனது பலம், அதனை ஒரு நேர்மறையான நோக்கத்துடன் வழிமுறைப்படுத்துகிறேன்.

என் சொந்த ஊரில் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியில் எங்களுக்கு நாங்களே உத்வேகம் அளித்துக் கொள்வது முக்கியமாகப் படுகிறது. நாங்கல் ஓரிரு வெற்றிகளில் திருப்தியடைவதில்லை.

இந்திய அணியின் திட்டங்களில் நான் கடந்த ஆண்டுகளில் இருந்து வந்தேன். ஆனால் காயங்கள் என் வாய்ப்பை பறித்தது. ஏனெனில் நான் என்னையே மிக அதிகமாக இதற்காகப் பாடுபடுத்திக் கொள்கிறேன் என்பதே. உள்நாட்டு தொடர்களிலும் சிறப்பாக ஆடுவதை எதிர்நோக்குகிறேன்.

இவ்வாறு அந்த நேர்காணலில் அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT