விளையாட்டு

இங்கிலாந்தில் தொடக்க வீரராக ரோஹித் சர்மா கஷ்டப்படுவார்: அசாருதீன் கணிப்பு

இரா.முத்துக்குமார்

இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா தொடக்கத்தில் களமிறங்கி ஆடினால் சிரமப்படுவார் என்று மொகமது அசாருதீன் கவலை தெரிவித்துள்ளார்.

இதற்குக் காரணமாக அவர் கூறுவது, ஐபிஎல் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா மிடில் ஆர்டரில் களமிறங்குவது என்கிறார் அவர். தொடக்க வீரர் தொடக்கத்தில்தான் களமிறங்க வேண்டும், மிடில் ஆர்டரில் இறங்குவது கூடாது என்று கூறுகிறார் அசாருதீன்.

“தொடக்க வீரர் என்றால் தொடக்கத்தில்தான் களமிறங்க வேண்டும். சிறந்த பேட்ஸ்மென்கள் முதல் 20 ஓவர்களில் ஆட வேண்டும். அணியின் சிறந்த வீரர் ஒருவர் டி20 கிரிக்கெட்டில் 8 ஓவர்கள் வீசிய பிறகு இறங்குவதும், ஒருநாள் போட்டிகளில் 30 ஓவர்கள் சென்ற பிறகும் இறங்குவது சரியாகாது. இதனால் பயன் ஏதுமில்லை. ரோஹித் சர்மா ஒரு சிறந்த பேட்ஸ்மேன், ஆனால் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 3, 4, 5-ம் நிலைகளில் களமிறங்குவது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

இதனால் சாம்பியன்ஸ் டிராபியில் அவர் நேரடியாகப் போய் தொடக்க வீரராக களமிறங்கினால் சிரமங்களை எதிர்கொள்வார். ஏனெனில் இந்தப் பிட்ச்கள் போல் அங்கு இருக்காது, வானிலை வேறு விதமானது, இவரும் காயத்திலிருந்து மீண்டுள்ளார். இவையெல்லாம் அவர் மனதில் இருக்கும்.

இம்முறை இந்திய அணி வெல்லாமல் போனால் நான் உண்மையில் ஏமாற்றமடைவேன், காரணம், நம் அணியில் சிறந்த பேட்டிங், பவுலிங் உள்ளது. வெல்லக்கூடிய அணியாக இந்திய அணி உள்ளது” என்கிறார் அசாருதீன்.

ஆஃப் ஸ்டம்பில் பிட்ச் ஆகி வெளியே ஸ்விங் ஆகும் பந்துகளுக்கு தொடக்கத்தில் ரோஹித் சர்மா தடுமாறுவார் என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருதுகின்றனர்.

SCROLL FOR NEXT