விளையாட்டு

டி லாமாவுக்கு நேர்ந்த சோகம்

செய்திப்பிரிவு

ஒலிம்பிக் தீபத்தை பிரேசில் மாரத்தான் வீரர் டி லாமா ஏற்றி வைத்தார். கடைசி நேரத்தில் பீலே உடல் நலக் கோளாறு காரணமாக ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனதால், அவருக்கு பதிலாக டி லாமாவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.

விளையாட்டு உலகில் பீலே போல டி லாமா அறியப்பட்டவர் இல்லை. ஆனால் ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் டி லாமா , சந்தித்த இடையூறு மட்டும் வெகு பிரபலம். ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ மீட்டர் மாரத்தானில் தங்க பதக்கத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார் டி லாமா. முதல் 35 கிலோ மீட்டர் தொலைவுக்கு அவர்தான் முதலிடத்தில் இருந்தார்.

அப்போது மது அருந்திய பார்வையாளர் ஒருவர், டி லாமாவின் குறுக்கே புகுந்து தடுத்து அவரை தரையில் தள்ளினார். இதன் காரணைமாக அவரால், தொடர்ந்து 30 விநாடிகள் வரை ஓட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் டி லாமாவின் தங்கக் கனவு பறி போனது.

முடிவில் 2 மணிநேரம் 12 நிமிடம் 11 விநாடிகளில் இலக்கினை கடந்த அவரால், வெண்கலப் பதக்கத்தையே வெல்ல முடிந்தது.

மறுபடியும் இந்த போட்டி நடத்த வேண்டுமென பிரேசில் கோரிக்கை விடுத்தது. ஆனால் பயன் இல்லை. எனினும் 'ஸ்பிரிட் ஆப் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் 'விருதை வழங்கி அப்போது டி லாமாவை கௌரவித்தது ஒலிம்பிக் கவுன்சில்.

மது அருந்திய ஒருவரால், ஒரு வீரரின் ஒலிம்பிக் கனவே பாழகிப்போனது. அப்போது உலகமே டி லாமாவுக்காக பரிதாபப்பட்டது. அந்த மனக் காயத்தை ஆற்றும் வகையில், ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைக்கும் பெருமை கிடைத்துள்ளது இப்போது.

SCROLL FOR NEXT