விளையாட்டு

ஸ்டம்ப்பை உருவி கோலியைத் தாக்கலாமா என்று தோன்றியது: ஆஸி. வீரர் எட் கோவன்

இரா.முத்துக்குமார்

ஒரு முறை விராட் கோலி தன்னை ஸ்லெட்ஜ் செய்த போது ஸ்டம்ப்பை உருவி தாக்கலாமா என்ற அளவுக்கு தனக்கு ஆத்திரம் ஏற்பட்டதாக ஆஸி. வீரர் எட் கோவன் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆஸி. ஊடகம் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸில் அவர் கூறியதாவது:

இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற தொடர் பற்றி நாம் தற்போது ஆச்சரியமடைந்து கொண்டிருக்கிறோம். கோலியை பார்ப்பது எனக்கு மகிழ்வூட்டும் ஒரு விஷயம். ஏனெனில் கிரிக்கெட்டுக்கு அவர் மூலம் ஒரு வில்லன் பாத்திரம் கிடைத்திருக்கிறதே.

வில்லன் இருக்கும் போது கிரிக்கெட் ஆட்டம் சுவாரசியமாக இருக்கிறது: ஸ்டூவர்ட் பிராட், கிரேம் ஸ்மித், அர்ஜுனா ரணதுங்கா.

நான் விராட் கோலியின் ஆட்டத்துக்கு மிகப்பெரிய விசிறி. என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள், அவர் ஒரு மகா கிரிக்கெட் வீரர்.

ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி வந்திருந்த போது அவர் மேற்கொண்ட ஸ்லெட்ஜ் முறையற்றது, நடுவர் தலையீட்டுக்கு இட்டுச் சென்றது.

அவர்களது முதல் மொழி ஆங்கிலமல்ல என்பதை நாங்கள் மறந்து விட்டோம். ஆனால் ஒருவீரராக அவர்கள் என்னை நோக்கி எதையோ வசையாகக் கூறுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் நாங்கள் அவர்களுடன் இந்தியில் உரையாட முடியாது எனும்போது இது முறையற்றதே.

எனவே அவர் என்ன கூறினார், என்ன கூறவில்லை என்பது குறித்த சர்ச்சைகள் எழும்.

என்னுடைய அம்மாவுக்கு அப்போது உடல் நலம் சரியில்லாத காலக்கட்டம், அப்போது அந்தத் தொடரில் நான் ஆடிக் கொண்டிருந்தேன், அப்போதுதான் அவர் முறையற்ற விதத்தில் ஒன்றைக்கூறினார்.

அவர் ஏதோ ஒன்று கூறுகிறார், அது மிகவும் மரியாதைக் கெட்டது, என்னுடைய சொந்த விஷயம் அதுவும் உணர்வுபூர்வமானது, ஆனால் தான் எல்லை மீறிவிட்டோம் என்பதை அவர் (கோலி) உணரவில்லை. அப்போதுதான் நடுவர் வந்து, ‘விராட் அது எல்லை மீறியதாகும்’ என்றார். அதன் பிறகு அவர் மன்னிப்புக் கேட்டார்.

ஆனால் அந்தக் கணம், ஸ்டம்பைப் பிடுங்கி அவரைத் தாக்கலாம் என்றுதான் எனக்கு ஒரு கணம் தோன்றியது.

இவ்வாறு கூறினார் எட் கோவன்.

SCROLL FOR NEXT