மொனாக்கோவில் நடைபெற்ற மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை சக நாட்டவரான வாவ்ரிங்கா வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இதன் மூலம் இப்போட்டியில் வாவ்ரிங்கா முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென் றுள்ளார். முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் வாவ்ரிங்கா இழந்தாலும், அடுத்த இரு செட்களை 7-6 (5), 6-2 என்ற செட் கணக்கில் வாவ்ரிங்கா கைப்பற்றினார். சர்வதேச டென்னிஸ் தரவரி சையில் வாவ்ரிங்கா 3-வது இடத்திலும், ரோஜர் பெடரர் 4-வது இடத்திலும் உள்ளனர். ஏற்கெனவே ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியிலும் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.
இதற்கு முன்பு ரோஜர் பெடரரும் வாவ்ரிங்காவும் 14 முறை மோதியுள்ளனர். இதில் பெடரர் ஒரு முறை தோல்வியடைந்திருந்தார்.இப்போது 2-வது முறையாக வாவ்ரிங்காவிடம் தோல்வியடைந் துள்ளார். வெற்றி குறித்து பேசிய வாவ்ரிங்கா, ரோஜர் பெடரர் மிகச் சிறந்த வீரர். அவரை எதிர்த்து இறுதி ஆட்டத்தில் விளையாடியது நல்ல அனுபவம். இந்த ஆண்டு எங்கள் இருவருக்குமே சிறப்பானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
சமீபத்தில் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றேன். இப்போது மாஸ்டர்ஸ் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.