எனக்கு கால்பந்தை உதைக்கத்தான் தெரியும், நடிக்கத் தெரியாது, அதனால் எதிர்காலத்தில் திரைப்படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை என்று பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் (38) தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான அவர், சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள அவர் தனது இளமை காலம், எதிர்காலம் குறித்து மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
ஓய்வு பெற்ற கால்பந்து வீரர்கள் சிலர் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். எனக்கு கால்பந்தை உதைக்கத் தெரியும், நடிக்கத் தெரியாது. அதனால் எதிர்காலத்தில் திரைப்படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை. அடிடாஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் விளம்பரப் படங்களில் ஓரளவுக்கு நடித்திருக்கிறேன்.
திரைப்படத்தில் எனது கதாபாத்திரத்தில் யாராவது நடிக்கலாம் என்றால் அதற்கு ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் மிகவும் பொருத்தமாக இருப்பார். அவருக்கு அடுத்தபடியாக லியானார்டோ டிகார்பியோவும் (டைட்டானிக் ஹீரோ) எனது கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கக் கூடியவர். அவர்களுக்கும் எனக்கும் உருவ ஒற்றுமைகள் உள்ளன.
ஓய்வு பெற்றது வலித்தது
என்னைவிட நான் மிகவும் நேசித்தது கால்பந்து. அந்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றது எனக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியது. மனம் ரணமாக வலித்தது. சுமார் 4 மாதங்கள் எதுவுமே செய்யத் தோன்றவில்லை. இப்போது மனதை தேற்றிக் கொண்டு இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளேன்.
எனது குடும்பம் கொஞ்சம் பெரியது. 4 குழந்தைகளோடு ஓடிப் பிடித்து விளையாடுவதற்கே நேரம் போதவில்லை.
எனக்கும் எனது மனைவி விக்டோரியாவுக்கும் இடையே சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அவை எங்கள் உறவை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுள்ளோம்.
பிரிட்டன் கால்பந்து அணியில் இளம் வீரராக சேர்ந்தபோது மூத்த வீரர்களால் நானும் ராகிங் செய்யப்பட்டிருக்கிறேன் என்றார் டேவிட் பெக்காம். -பி.டி.ஐ.