விளையாட்டு

டி20: அயர்லாந்திடம் மேற்கிந்தியத்தீவுகள் தோல்வி

செய்திப்பிரிவு

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அயர்லாந்து அணி மேற்கிந்தியத்தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையே 2 இருபது ஓவர் போட்டி நடைபெறவுள்ளது. இதில் முதல் இருபது ஓவர் கிரிக்கெட் ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத்தீவுகள் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

டேயன் ஸ்மித், கிறிஸ் கெயில் ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர். 5-வது ஓவரில் மேற்கிந்தியத்தீவுகள் 31 ரன்களை எட்டியபோது ஸ்மித் 14 ரன்களில் வெளியேறினார். அடுத்து சாமுவேல்ஸ் களமிறங்கினார். அடுத்த ஓவரிலேயே கெயில் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து சாமுவேல்ஸ், சிம்மன்ஸ் ஆகியோர் முறையே 16 ரன்களில் வெளியேறினர்.

பிராவோ 8, ரஸல் 15, கேப்டன் சமி 7, ராம்தீன் 4 என மேற்கிந்தியதீவுகள் அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத்தீவுகள் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணியில் தொடக்க வீரர்களான கேப்டன் போர்ட்பில்ட் 4, ஸ்டெர்லின் 0 என ஆட்டமிழந்தாலும், ஜாய்ஸி நிலைத்து நின்று விளையாடி 40 ரன்கள் எடுத்தார், பாய்ன்டர் அவருக்கு பக்கபலமாக 32 ரன்கள் எடுத்தார். இதனால் 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்து அயர்லாந்து வெற்றி பெற்றது. ஜாய்ஸி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அயர்லாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அடுத்த போட்டி இன்று நடைபெறவுள்ளது.

SCROLL FOR NEXT