ஓல்ட் டிராபர்ட்டில் நடைபெறும் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் ஜோ ரூட் 254 ரன்கள் வெளுத்துக்கட்ட இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 589 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் தன் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்துள்ளது.
நேற்றைய நாயகன் ஜோ ரூட்தான். சுமார் 10 மணிநேர மாரத்தன் இன்னிங்ஸில் 406 பந்துகளில் 27 பவுண்டரிகளுடன் 254 ரன்கள் எடுத்து தனது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரை எட்டினார் ஜோ ரூட்.
314/4 என்று தொடங்கிய இங்கிலாந்து அணியில் இரவுக்காவலன் கிறிஸ் வோக்ஸ் முதலில் சிறப்பாக ஆடினார். அருமையான டிரைவ்கள், கட் ஷாட்கள் மூலம் மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரத்தை தூண்டினார். ஜோ ரூட் 150 ரன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் 5-வது முறையாகக் கடந்தார். பாகிஸ்தான் எப்படியாவது கேட்சை விட்டு யாருக்காவது வாழ்வளிப்பதில் ‘சிறந்த’ அணி. யாசிர் ஷா பந்தில் யூனிஸ் கான் ஸ்லிப்பில் ஜோ ரூட்டுக்கு கேட்ச் ஒன்றை விட்டார். யாசிர் ஷாவும் பந்து வீச்சில் இரட்டைச் சதம் அடித்து 213 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக ஏமாற்றமளித்த ஜோ ரூட், தற்போது தனது 10வது டெஸ்ட் சதம் இரட்டைச் சதமானதை நினைத்து பெருமையடைவதாகத் தெரிவித்துள்ளார்.
கிறிஸ் வோக்ஸ் நல்ல பார்மில் உள்ளார், அவர் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்து யாசிர் ஷா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
மீண்டும் அணிக்கு வந்துள்ள பென் ஸ்டோக்ஸ் அனாயாசமான முறையில் 34 ரன்களை எடுத்தார். ஜோ ரூட், யாசிர் ஷாவின் பந்தை மிகத்துல்லியமான முறையில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி தனது இரட்டைச் சதத்தை எடுத்தார். ஸ்டோக்ஸ் லெக் திசை பந்தை விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வஹாப் ரியாஸிடம் வீழ்ந்தார். மிக நீளமான ரிவியூவுக்குப் பிறகு ஸ்டோக்ஸ் அவுட் என்று தீர்மானிக்கப்பட்டார். ஜானி பேர்ஸ்டோ 81 பந்துகளில் 58 ரன்களை விளாசினார்.
ஜோ ரூட் 254 ரன்களை எடுத்த பிறகு வஹாப் ரியாஸ் பந்தை மிட்விக்கெட்டில் தூக்கி அடிக்க பந்து சரியாகச் சிக்காமல் ஹபீஸ் கையில் கேட்ச் ஆனது. ஸ்கோர் 589 ரன்கள் வந்தவுடன் குக் டிக்ளேர் செய்தார்.
பாகிஸ்தான் தொடக்க வீர்ர்கள் ஷான் மசூத், மொகமது ஹபீஸ், ஆகியோர் பிராட், ஆண்டர்சன் ஓவர்களை எச்சரிக்கையுடன் ஆடினர். மீண்டும் கிறிஸ் வோக்ஸ் வந்தவுடன் ஹபீஸ் (18) விக்கெட்டைச் சாய்த்தார். ஸ்லிப்பில் ஜோ ரூட் தாழ்வாக வந்த கேட்சை பிடித்தார். அசார் அலி 1 ரன்னில் வோக்ஸ் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். யூனுஸ் கான் லெக் திசைப் பந்தில் ஸ்டோக்ஸிடம் விக்கெட் கீப்பர் கேட்சுக்கு அவுட் ஆனார். இரவுக்காவலனாக இறக்கப்பட்ட ரஹத் அலி, வோக்ஸின் ஷார்ட் பிட்ச் பந்தை ஷார்ட் லெக் பீல்டரிடம் கேட்ச் கொடுத்தார்.
ஷான் மசூத் 30 ரன்களுடன் கேப்ட்ன் மிஸ்பா (1) உல் ஹக்குடன் போராடி வருகிறார்.