டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிரடியாக விளையாடி வெற்றித் தேடித்தந்த யுவராஜ் சிங்கை இந்திய கேப்டன் தோனி பாராட்டியுள்ளார்.
வங்கதேசத்தின் மிர்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 73 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது. தொடர்ந்து சொதப்பி வந்த யுவராஜ் சிங், இந்த ஆட்டத்தில் 43 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். இந்தியா வெற்றி பெற்ற பிறகு பேசிய தோனி, “யுவராஜ் மிக அற்புதமாகவும், துல்லியமாகவும் ஆடினார். அவர் ஆரம்பத்தில் நிலைத்து நின்று ஆடுவதற்காக கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டார். அவர் களத்தில் நின்றுவிட்டால் எப்படி அதிரடியாக ஆடுவார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
உலகின் மிகப்பெரிய மைதானங்களில்கூட அவர் சிக்ஸர்களை விளாசக்கூடியவர். வேகப்பந்து வீச்சாளர்களையும், சுழற்பந்து வீச்சாளர்களையும் பதம்பார்க்கூடியவர். அவர் மீண்டும் பார்மிற்கு வருவதற்கு இன்றைய ஆட்டத்தைப் போன்ற ஓர் ஆட்டம் தேவைப்பட்டது. அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்” என்றார்.