ஓவலில் நடைபெறும் இறுதி டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் இங்கிலாந்து பந்து வீச்சை புரட்டி எடுத்து 218 ரன்கள் குவிக்க பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 542 ரன்கள் குவித்தது.
இதன் மூலம் பாகிஸ்தான் 214 ரன்கள் முன்னிலை பெற சிக்கலான நிலையில் இங்கிலாந்து தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.
யூனிஸ் கான், மொயின் அலி பந்தை சிக்ஸர் அடித்து தனது 200 ரன்கள் இலக்கை எட்டிய யூனிஸ் கான் 6-வது டெஸ்ட் இரட்டைச் சதம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
308 பந்துகளைச் சந்தித்த யூனிஸ் கான் அதில் 31 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 218 ரன்கள் எடுத்து 9-வது விக்கெட்டாக ஆண்டர்சன் பந்தில் எல்.பி.ஆனார்.
இவருக்கு சர்பராஸ் அகமது (44), மொகமது ஆமிர் (39) ஆகியோர் உறுதுணையாக ஆடினர். 340/6 என்று தொடங்கிய பாகிஸ்தான் இங்கிலாந்து அணியை விக்கெட்டுகளுக்காக 4 மணி நேரம் போராட வைத்தது, மேலும் 202 ரன்களைச் சேர்த்தது.
சர்பராஸ் அகமது 44 ரன்களில் கிறிஸ் வோக்ஸ் பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார். முன்னதாக ஆசாத் ஷபிக் (109) உடன் இணைந்து 150 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்க்க உறுதுணையாக இருந்த யூனிஸ் கான், சர்பராஸ் விக்கெட்டுக்குப் பிறகு வஹாப் ரியாஸ் (4) உடன் இணைந்து 37 ரன்களைச் சேர்த்தார். வஹாப் ரியாஸ் மொயின் அலி பந்தில் ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார். ஆனால் அதன் பிறகு இங்கிலாந்து பிடியை இறுக்கவில்லை, யூனிஸ் கான் அற்புதமாக ஆடினார்.
மொகமது ஆமிருடன் இணைந்து 9-வது விக்கெட்டுக்காக 97 ரன்கள் சுமார் 21 ஓவர்களில் சேர்க்கப்பட்டது. அப்போது யூனிஸ் கான் 218 ரன்களில் ஆண்டர்சனிடம் வீழ்ந்தார். அதி அற்புதமான மாரத்தன் இன்னிங்ஸ் ஆகும் இது, இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வென்றால் இந்த இன்னிங்ஸ் ஒரு ஆல்டைம் கிரேட் இன்னிங்ஸ் பட்டியலில் இடம்பெற்றுவிடும்.
ஆமிர் 70 பந்துகளைச் சந்தித்து 5 பவுண்டரி 1 சிக்சருடன் 39 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இங்கிலாந்தில் ஃபின், வோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, மொயின் அலி 23 ஓவர்களில் 128 ரன்கள் என்று சாத்துமுறைக்குப் பிறகு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
போட்டியையும் தொடரையும் காப்பாற்ற இங்கிலாந்து தற்போது போராட வேண்டிய நிலையில் இரண்டாவது இன்னிங்சில் குக், ஹேல்ஸ் ஆடி வருகின்றனர்.