விளையாட்டு

ஸ்கார்ச்சர்ஸை பந்தாடியது ஒடாகோ

செய்திப்பிரிவு

சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஒடாகோ அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸை தோற்கடித்தது.

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் புதன்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், ஒடாகோவை முதலில் பேட் செய்ய அழைத்தது. நீல் புரூம், ரூதர்போர்ட் ஆகியோர் ஒடாகோவின் இன்னிங்ஸை தொடங்கினர்.

ரூதர்போர்ட் 2 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் ரன் ஏதுமின்றியும் வெளியேற 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஒடாகோ. இதன்பிறகு புரூமுடன் இணைந்தார் டி பூர்டர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 7.3 ஓவர்களில் 67 ரன்கள் சேர்த்து. வோஜஸ் பந்துவீச்சில் சிக்ஸர் மற்றும் பவுண்டரியை விளாசிய கையோடு விக்கெட்டை பறிகொடுத்தார் டி பூர்டர். அவர் 28 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து புரூமுடன் ஜோடி சேர்ந்தார் டென் தஸ்சாத்தே. இந்த ஜோடி பெர்த் பௌலர்களை நாலாபுறமும் சிதறடித்தது. இதனால் புரூம் 34 பந்துகளில் அரைசதமடித்தார். மறுமுனையில் கிடைத்த பந்துகளையெல்லாம் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டிய தஸ்சாத்தே 21 பந்துகளில் அரைசதம் கண்டார்.

பெஹ்ரன்டார்ப் வீசிய 18-வது ஓவரில் இரு சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாசிய தஸ்சாத்தே, அதே ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 26 பந்துகளில் 6 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் குவித்தார்.

பாரிஸ் வீசிய 19-வது ஓவரை எதிர்கொண்ட புரூம், ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். அதில் அவர் 2-வது சிக்ஸரை அடித்தபோது 51 பந்துகளில் சதம் கண்டார். புரூம் 56 பந்துகளில் 8 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 117 ரன்கள் குவிக்க, ஒடாகோ 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் குவித்தது.

இந்தப் போட்டியில் 117 ரன்கள் குவித்த புரூம், சாம்பியன்ஸ் லீக் போட்டியின் ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 3-வது இடத்தைப் பிடித்தார்

ஒடாகோ வெற்றி

243 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியில் டேவிட் ரன் ஏதுமின்றியும், ஆஷ்டன் அகர் 10 ரன்களிலும், கேப்டன் சைமன் கேடிச் ரன் ஏதுமின்றியும் வெளியேற, பெரும் பின்னடைவு ஏற்பட்டது. பின்னர் வந்தவர்களில் ஆடம் வோஜஸ் 36, டர்னர் 23, டிரிப்பிட் 25 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் தனிநபராகப் போராடிய கார்ட்ரைட் 54 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் குவித்தார். எனினும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸை தோல்வியில் இருந்து மீட்க முடியவில்லை. அந்த அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் ஒடாகோ 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

ஒடாகோ தரப்பில் பட்லர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சதமடித்த நீல் புரூம் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT