சிங்கப்பூரில் நடந்த சிங்கா கோப்பை கால்பந்துப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை சிட்டி கால்பந்து கிளப் அணி அரையிறுதி வரை முன்னேறியது.
சிங்கப்பூரில், 2011 முதல் சிங்கா கோப்பை என்கிற சிங்கப்பூர் சர்வதேச இளைஞர் கால்பந்துப் போட்டி நடைபெற்று வருகிறது. 18, 16, 14, 12 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையே நடக்கும் போட்டி இது. சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் என பல நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் இந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை சிட்டி கால்பந்து கிளப் அணி சிறப்பாக ஆடியுள்ளது.
18 வயதுக்குட்பட்ட அணியில் குரூப் ஏ அணியில் இடம்பெற்ற சென்னை சிட்டி அணி, 4 ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் தோற்று பிறகு, 3-ம் இடத்துக்கான போட்டியிலும் தோல்வி அடைந்து 4-ம் இடத்தைப் பிடித்தது.
சென்னை சிட்டி அணி, இந்த வருடம்தான் சிங்கா கோப்பைப் போட்டியில் முதல்முறையாக பங்கேற்றுள்ளது. அணியின் பயிற்சியாளரான முன்னாள் இந்திய வீரர் ராமன் விஜயன் கூறும்போது, “இந்த வெற்றியை எதிர்பார்த்தோம். சென்னை சிட்டி அணி வீரர்கள் செயற்கை புல்தரையில் விளையாடியது கிடையாது. ஆனாலும் சிங்கப்பூரில் சிறப்பாக ஆடினார்கள்.” என்றார். விஜயனால், ராஜபாண்டி போன்ற கிராமங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்ட திறமையான இளைஞர்கள், ரோஹித் ரமேஷின் சென்னை சிட்டி கால்பந்து கிளப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள சென்னை சிட்டி கிளப்பின் அகாடமியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.