விளையாட்டு

ஆயுள் தடை: கேரள உயர் நீதிமன்றத்தை அணுகிய ஸ்ரீசாந்த்

செய்திப்பிரிவு

2013 ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் பிசிசிஐ-யால் ஆயுள் தடை விதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், தனது தடையை விலக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

டெல்லி அமர்வு நீதிமன்றம் இதில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்தது என்பதை தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீசாந்த்.

இந்தத் தீர்ப்பை அடுத்து பிசிசிஐ தன் மீதான தடையை விலக்க வேண்டும் என்று கோரியதை பிசிசிஐ கண்டுகொள்ளவில்லை, பிப்ரவரி 16, 2017-ல் பிசிசிஐக்கு நோட்டீஸும் அனுப்பிப் பார்த்தார் ஸ்ரீசாந்த், ஆனால் இதற்கு கிரிக்கெட் வாரியம் பதிலளிக்கவில்லை என்பதையும் தன் மனுவில் ஸ்ரீசாந்த் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஸ்காட்லாந்தில் சென்று கிளப் கிரிக்கெட் ஆட பிசிசிஐ-யிடம் தான் அனுமதி சான்றிதழ் கேட்டதாகவும் பிசிசிஐ அதையும் அளிக்கவில்லை என்ற விவரத்தையும் மனுவில் ஸ்ரீசாந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது கேரள உயர் நீதிமன்றத்தின் முடிவுக்காக காத்திருக்கிறார் ஸ்ரீசாந்த்.

SCROLL FOR NEXT