மும்பையில் நேற்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி 3-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணியைத் தோற்கடித்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளுமே கோலடிக்காத நிலையில், 2-வது பாதி ஆட்டத்தின் 71-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது சென்னை.
சென்னை வீரர் ஜேஜே கோல் கம்பத்தை நோக்கி கிராஸ் செய்த பந்தை மும்பை வீரர் பீட்டர் கோஸ்டா கோட்டைவிட, அதை சரியாகப் பயன்படுத்தி கோலடித்தார் சென்னை மிட்பீல்டர் பெலிசாரி.
இதன்பிறகு அபாரமாக ஆடிய சென்னை அணிக்கு 81-வது நிமிடத்தில் 2-வது கோல் கிடைத்தது. இந்த கோலை தனசந்த்ரா அடித்தார். இதைத்தொடர்ந்து 89-வது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பைப் பயன்படுத்தி சென்னையின் மாற்று ஆட்டக்காரரான கிறிஸ்டியான் கோலடிக்க, சென்னை அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை 19 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. கவுகாத்தியில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும், டெல்லி டைனமோஸ் அணியும் மோதுகின்றன.