விளையாட்டு

தோல்வியைத் தவிர்க்க தென் ஆப்பிரிக்கா போராட்டம்

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வியைத் தவிர்க்கப் போராடி வருகிறது தென் ஆப்பிரிக்கா. 511 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் 2-வது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா 15.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்திருந்தது.

தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 494 ரன்களும், தென் ஆப்பிரிக்கா 287 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 2-வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 4-வது நாளான செவ்வாய்க்கிழமை 58 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வார்னர் 145 ரன்கள் குவித்தார். அவர் முதல் இன்னிங்ஸிலும் சதமடித்தது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்கா-34/3

இதையடுத்து 511 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் பீட்டர்சன் 9 ரன்களில் ஆட்டமிழக்க, இந்தப் போட்டியோடு ஓய்வு பெறும் ஸ்மித் 3 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றத்துடன் திரும்பினார். பின்னர் வந்த எல்கர் டக் அவுட்டானார். அந்த அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 34 ரன்கள் எடுத்திருந்தது. ஆம்லா 14, டிவில்லியர்ஸ் 8 ரன்களுடன் ஆடிக் கொண்டிருந்தனர். தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 477 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.

ஸ்மித் ஓய்வு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் தென் ஆப்பிரிக்க கேப்டன் கிரீம் ஸ்மித்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பது: எனது வாழ்க்கையில் நான் எடுத்த முடிவுகளில் இதுதான் மிகக் கடினமான முடிவு. எனது சொந்த மண்ணில் ஓய்வு பெறுவதை சிறப்பானதாகக் கருதுகிறேன். கடந்த ஏப்ரலில் கணுக்கால் காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்தபோதே ஓய்வை பற்றி சிந்தித்தேன்” என ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.

117-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் கிரீம் ஸ்மித், அதில் 109 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். இதன்மூலம் சர்வதேச அளவில் அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு (109) கேப்டனாக இருந்தவர், அதிக டெஸ்ட் போட்டிகளில் (53 வெற்றி) வென்ற அணிக்கு கேப்டனாக இருந்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவர் 2003-ல் தென் ஆப்பிரிக்காவின் கேப்டன் பொறுப்பை ஏற்றபோது சர்வதேச அளவில் 3-வது இளம் டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார்.

117 டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்களுடன் 9,265 ரன்கள் குவித்துள்ள ஸ்மித், 197 ஒருநாள் போட்டிகளில் 6989 ரன்கள் குவித்துள்ளார். 27 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 982 ரன்கள் எடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT