விளையாட்டு

ஆஷஸ் நான்காவது டெஸ்ட்: ஆஸ்திரேலியா மீண்டும் ஆதிக்கம்

செய்திப்பிரிவு

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில், இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் பீட்டர்சன், அதிகபட்சமாக 67 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

இன்று மெல்போர்ன் நகரில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி துவங்கியது. டாஸை வென்ற ஆஸி முதலில் ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. கேப்டன் குக் மற்றும் கார்பெர்ரி ஜோடி முதலில பேட்டிங் செய்ய களமிறங்கினர்.

இருவரும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் 27 ரன்கள் எடுத்திருந்த போது, குக், சிட்டில் பந்தில் ஆட்டமிழந்தார். பிறகு உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காத இங்கிலாந்து 71 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவேளைக்குப் பின் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை கார்பெர்ரியும், ரூட்டும் சில நேரம் தாக்குபிடித்தனர். வாட்சனின் பந்தில் கார்பெர்ரி 38 ரன்களுக்கு தன் விக்கெட்டை இழந்தார். ஜோ ரூட்டும் 24 ரன்களுக்கு ஹாரிஸின் பந்து வீச்சில் வெளியேறினார்.

தேனீர் இடைவேளைக்கு பின், இன்னும் மூன்று விக்கெட்டுகள் விழ, மறுமுனையில் இருந்த பீட்டர்சன் மட்டுமே இன்றைய ஆட்டத்தில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடினமான ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளித்து, அரை சதத்தையும் பீட்டர்சன் கடந்தார். இன்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பீட்டர்சன் ஆட்டமிழக்காமல் 67 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலியாவின் தரப்பில் ஹாரிஸ், ஜான்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், சிட்டில், வாட்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். நாளை பீட்டர்சனை சதம் எடுக்க விடாமல் தடுப்பதே ஆஸ்திரேலியாவின் நோக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் 3 டெஸ்ட்டிலும் வென்று, இந்தத் தொடரை ஆஸ்திரேலியா ஏற்கனவே வென்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மிச்சமுள்ள இரண்டு போட்டிகளையாவது இங்கிலாந்து வெல்லும் என பலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இங்கிலாந்தின் இன்றைய ஆட்டம் ஏமாற்றும் தரும் விதமாக அமைந்தது.

உலக சாதனை

ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் போடியின் முதல் நாளான இன்று, ஆட்டத்தைக் காண வந்த ரசிகர்கள் கூட்டம் உலக சாதனை படைத்தனர். இதற்கு முன்னர் 1960ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா - மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் போட்டியைக் காண வந்திருந்த ரசிகர்களின் எண்ணிக்கையே உலக சாதனையில் இடம் பெற்றிருந்தது. மொத்தம் 90,800 ரசிகர்கள் அன்று மைதானத்தில் இருந்தனர். இன்று மெல்போர்னில் 91,092 ரசிகர்கள் இருந்தனர். இதன் மூலம் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது என மைதானத்தில் இருக்கும் பெரிய திரையில் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT