விளையாட்டு

ஜோகோவிச்சின் புதிய பயிற்சியாளர் பெக்கர்

செய்திப்பிரிவு

உலகின் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜெர்மனியைச் சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் போரிஸ் பெக்கரை தனது புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமித்துள்ளார்.

இந்தத் தகவலை ஜோகோவிச் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட் டுள்ளார். இது தொடர்பாக ஜோகோவிச் மேலும் கூறியிருப்பதாவது: போரிஸ் பெக்கருடன் இணைந்து பயிற்சி பெற வாய்ப்பு கிடைத்திருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன். அவர் உண்மையான ஜாம்பவான். அவர் டென்னிஸில் அதீத அறிவுடையவர். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் மற்ற போட்டிகளிலும் நான் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு பெக்கரின் அனுபவம் எனக்கு உதவும். போரிஸ் புதிய அணுகுமுறையைக் கொண்டு வருவார். எனது பயிற்சியாளர் வஜ்தா, பெக்கர் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும்.

2014-ல் சிறப்பான முறையில் விளையாட வேண்டும். கிராண்ட்ஸ்லாம் மற்றும் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு. இந்த இரண்டும் டென்னிஸில் மிக முக்கியமான போட்டிகள். அதில் எனது திறமையை நிரூபிக்க விரும்புகிறேன். எனது பயிற்சியாளர்கள் அணி இப்போது பலப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் வெற்றிகளைக் குவிக்க முடியும் என நம்புகிறேன் என்று ஜோகோவிச் குறிப்பிட்டுள்ளார்.

6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் உள்பட மொத்தம் 64 ஏடிபி பட்டங்களை வென்றவரான 46 வயதாகும் போரிஸ் பெக்கர் இது தொடர்பாக கூறியிருப்பதாவது: ஜோகோவிச் அவருடைய தலைமைப் பயிற்சியாளராக என்னை நியமிக்க விருப்பம் தெரிவித்து எனக்கு அழைப்பு விடுத்தது பெருமையாக இருந்தது. ஜோகோவிச் தனது இலக்கை அடைவதற்கு என்னால் முடிந்தவரை சிறப்பாக உதவுவேன். நாங்கள் இருவரும் இணைந்து வெற்றிகளைக் குவிப்பது உறுதி என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஜோகோவிச்சின் பயிற்சியாளராக இருக்கும் மரியான் வஜ்தா, மில்ஜான் அமனோவிக், ஜெப்பார்டு பில் கிரிட்ஸ்ச் ஆகியோருடன் பெக்கரும் ஜோகோவிச்சுக்கு பயிற்சியளிக்கவுள்ளதாக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக ஜோகோவிச்சுக்கு பயிற்சியளித்து வரும் வஜ்தா, புதிய தலைமைப் பயிற்சியாளர் பெக்கரை வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பது: பெக்கரை தேர்வு செய்தது சரியான முடிவு. ஜோகோவிச் தனது விளையாட்டை மேம்படுத்த புதிய தலைமைப் பயிற்சியாளர் தேவை என்பதை நான் உணர்ந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

வரும் ஜனவரி 13-ம் தேதி தொடங்கவுள்ள ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து ஜோகோவிச்சுக்கு பயிற்சியளிக்கவுள்ளார் பெக்கர். ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் தொடர்ந்து 3 முறை பட்டம் வென்றபோதிலும், இந்த ஆண்டில் பிரெஞ்சு ஓபன் அரையிறுதியில் நடாலிடம் தோற்று வெளியேறினார். விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டிகளில் முறையே ஆன்டி முர்ரே மற்றும் நடாலிடம் தோல்வி கண்டார். மேலும் தரவரிசையிலும் முதலிடத்தை நடாலிடம் இழந்தார்.

SCROLL FOR NEXT