விளையாட்டு

விஜய் ஹசாரே ஒருநாள் போட்டி; மகாராஷ்டிராவிடம் வீழ்ந்தது தமிழகம்- ஜார்க்கண்ட் அசத்தல் வெற்றி

செய்திப்பிரிவு

விஜய் ஹசாரே ஒருநாள் போட்டி தொடரில் பி பிரிவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் தமிழக அணியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மகாராஷ்டிரா அணி.

கட்டாக்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மகாராஷ்டிரா அணி 48.5 ஓவர்களில் 270 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக கெய்க் வாட் 82, நவுஷாத் ஷெய்க் 68 ரன்கள் எடுத்தனர். தமிழக அணி தரப்பில் முகமது 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.

271 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தமிழக அணி 49.1 ஓவரில் 248 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 49, கவுசிக் காந்தி 38 ரன்கள் சேர்த்தனர். மகாராஷ்டிரா அணி தரப்பில் முந்த்ஹி 4 விக்கெட்கள் வீழ்த்தினார்.

4 ஆட்டத்தில் விளையாடி உள்ள தமிழக அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்தது. அதேவேளையில் மகாராஷ்டிரா தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பதிவு செய்தது.

ஜார்க்கண்ட் வெற்றி

டி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தோனி தலைமையிலான ஜார்க்கண்ட் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் சவுராஷ்டிராவை தோற்கடித்தது. கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஜார்க்கண்ட் அணி 27.3 ஓவர்களில் 125 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இஷான் கிஷன் 53, தோனி 23 ரன்கள் எடுத்தனர். 3 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். சவுராஷ்டிரா அணி தரப்பில் சனந்தியா 5 விக்கெட்கள் வீழ்த்தினார். 126 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சவுராஷ்டிரா அணி 25.1 ஓவரில் 83 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக ஜேக்சன் 20, படேல் 15 ரன்கள் எடுத்தனர். ஜார்க்கண்ட் அணி தரப்பில் வருண் ஆரோன், சுக்லா ஆகியோர் தலா 4 விக்கெட்கள் கைப்பற்றினர். அந்த அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. சவுராஷ்டிரா அணி பங்கேற்ற 4 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

SCROLL FOR NEXT