ஜிம்னாஸ்டிக்ஸ் உலகத்தை நமக்கு அறிமுகம் செய்த ஒலிம்பிக் சாதனை வீராங்கனை திபா கர்மாகருக்கு இன்று அகர்தலாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பதக்கம் வெல்ல முடியாமைக்கு மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்ட திபா கர்மாகர், 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் நிச்சயம் தங்கம் வெல்வதாக உறுதி அளித்து ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்தார்.
விமானநிலையத்தில் இன்று திபா கர்மாகர் மற்றும் அவரது பயிற்சியாளர் ஆகியோருக்கு எழுச்சி வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு விவேகானந்தா விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
திபா கர்மாகர், பயிற்சியாளர் விஸ்வேஷ்வர் நந்தி திறந்த வாகனத்தில் பயணம் செய்ய, பெரும்பாலும் மாணவர்கள் குழாம் வழி நெடுக இவர்களுக்கு உற்சாகமூட்டினர்.
ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியாமல் போனாலும், இவரது அளப்பரிய சாதனையை அங்கீகரிக்கும் விதமாக நாளை (செவ்வாய்) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் தபன் சக்ரவர்த்தி.
திபா கூறும்போது, “இந்தியாவில் சிறந்த பயிற்சியாளர்கள் உள்ளனர், எனக்கு விஸ்வேஷ்வர் சார் சிறந்தவராக அமைந்துள்ளார்” என்றார்.