விளையாட்டு

கேப்டன் மணீஷ் பாண்டே அபார சதம்: தென் ஆப்பிரிக்கா ஏ அணியை வீழ்த்திய இந்தியா ஏ

இரா.முத்துக்குமார்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 4 அணிகளுக்கிடையேயான 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா ஏ அணியை இந்தியா ஏ அணி இன்று வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா ஏ அணி டேவிட் மில்லரின் 104 பந்து 90 ரன்களுடன் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்தது. தவல் குல்கர்னி 10 ஒவர்கள் 2 மெய்டன்கள் 37 ரன்கள் 4 விக்கெட்டுகள் என்று அசத்தினார். உனட்கட், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய இந்தியா ஏ அணி ஃபாசல், கருண் நாயர், மந்தீப் சிங் ஆகியோரை இழந்து 15-வது ஓவரில் 65/3 என்று தடுமாறி வந்தது. ஆனால் கேப்டன் மணீஷ் பாண்டே 105 பந்துகளில் 9 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 100 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார். 48.4 ஓவர்களில் இந்தியா ஏ அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

டாஸ் வென்று முதலில் பீல்டிங் எடுத்த மணீஷ் பாண்டே அதில் வெற்றியடைந்தார், தவல் குல்கர்னி, ஜெயதேவ் உனட்கட், ஹர்திக் பாண்டியா விக்கெட் எடுக்க 35/3 என்று ஆனது தென் ஆப்பிரிக்கா கூன், ஹென்ரிக்ஸ், விலாஸ் ஆகியோர் பெவிலியன் திரும்பினர். டிபுருய்ன் 61 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து ஓரளவுக்கு மீட்டாலும் 23-வது ஓவரில் இவரும் பாண்டியாவிடம் பவுல்டு ஆகி வெளியேற 88/4 என்று மீண்டும் சோதனைக்குள்ளானது. ஆனால் அதன் பிறகு டேவிட் மில்லர், ஆல்ரவுண்டர் மூகமட் காசிம் ஆடம்ஸ் இணைந்து 19 ஓவர்களில் 5-வது விக்கெட்டுக்காக 110 ரன்களைச் சேர்த்தனர்.

இந்நிலையில் 55பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்த ஆடம்ஸ் உனட்கட் பந்தில் ஆட்டமிழந்தார். சதம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மில்லர் 104 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 90 ரன்கள் எடுத்து குல்கர்னியிடம் ஆட்டமிழக்க, 50 ஓவர்களில் ஓரளவுக்கு பந்து வீசக்கூடிய தெம்பை அளிக்கும் 230 ரன்களை தென் ஆப்பிரிக்கா ஏ அணி எட்டியது.

இந்தியா ஏ-வின் துரத்தல் தொடக்கத்தில் ஓரளவுக்கு நன்றாக அமைந்தது, பாசல் (19), கருண் நாயர் (17) ஆகியோர் 9 ஓவர்களில் 41 ரன்கள் எடுத்தனர். ஆனால் 4 பந்துகள் இடைவேளியில் இரண்டு தொடக்க வீரர்களையும் வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஆண்டைல் லக்கி பெலுக்வயோ அடுத்தடுத்து பெவிலியன் அனுப்பினார். கேதர் ஜாதவ் (26), சஞ்சு சாம்சன் (2) ஆகியோர் 2 ஓவர்கள் இடைவெளியில் ஆடம்ஸிடம் விழ 135/5 என்று தடுமாற்றம் கண்டது.

ஆனால் மணிஷ் பாண்டே, தவல் குல்கர்னியின் 26 பந்து 23 ரன்கள் உதவியுடன் அபாரமாக சதம் எடுத்து வெற்றிபெறச் செய்தார். வெற்றி ரன்களையும் சதத்தையும் பவுண்டரி மூலம் சாதித்தார் மணீஷ் பாண்டே.

இதன் மூலம் ஆஸ்திரேலியா பர்பான்ஸ் அணியை அடுத்த போட்டியில் சந்திக்கிறது இந்தியா ஏ அணி, பெர்பாமன்ஸ் அணி 2 வெற்றிகளுடன் முதலிடம் வகிக்க ஆஸ்திரேலியா ஏ 2-வது இடத்திலும் இந்தியா ஏ மூன்றாவது இடத்திலும் உள்ளது. இறுதிப் போட்டி செப்டம்பர் 4-ல் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT