சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் அகுட், யூஸ்னி கால் இறுதிக்கு முன்னேறினர். அதே வேளையில் 2-வது சுற்றுடன் வெளியேறினார் இந்தியாவின் யூகி பாம்ப்ரி.
தெற்காசியாவின் ஒரே ஏடிபி தொடரான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி தமிழக அரசின் ஆதரவுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
4-வது நாளான நேற்று ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 14-ம் நிலை வீரரும் போட்டிதரவரிசையின் 2-ம் நிலை வீரருமான ஸ்பெயின் ராபர்ட்டோ பவுதிஸ்டா அகுட், 98-ம் நிலை வீரரான பிரேசிலின் தத்ரா சில்வாவுடன் மோதினார். இதில் 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்ற அகுட், கால் இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் 57-ம் நிலை வீரரான ரஷ்யாவின் மிகைல் யூஸ்னி 6-1, 7-5 என்ற நேர் செட்டில் அர்ஜென்டினாவின் ரென்சோ ஆலிவோவை வீழ்த்தி கால் இறுதியில் நுழைந்தார்.
இந்தியாவின் யூகி பாம்ப்ரி, தரவரிசையில் 47-வது இடத்தில் உள்ள பிரான்சின் பெனோயிட் பேர் உடன் மோதினார். சுமார் 1 மணி நேரம் 25 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாம்ப்ரி 3-6, 4-6 என்ற நேர் செட்டில் தோல்வியை சந்தித்தார்.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் புரவ் ராஜா, திவிஜ் சரண் ஜோடி 4-6, 4-6 என்ற நேர் செட்டில் இந்தியாவின் லியான்டர் பயஸ், பிரேசிலின் ஆண்ட்ரே சா ஜோடியை வீழ்த்தியது.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியா வின் சாகேத் மைனேனி, ராம் குமார் ராமநாதன் ஜோடியும் வெற்றி பெற்றிருந்தது.
இன்றைய ஆட்டங்கள்
ஆல்பர்ட் ரமோஸ் டுடி செலா
ஜோசப் கோவிலக் மேத்ததேவ்
பெனோயிட் பேர் பெடேன் அல்லது கிளிசான்
மிகைல் யூஸ்னி அகுட்