பந்து வீச்சாளர்கள் அவர்களுக்கு தகுந்தபடி பீல்டிங் வியூகம் அமைக்க கேப்டன் விராட் கோலி முழு சுதந்திரம் வழங்குவதாக இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
விராட் கோலி பந்து வீச்சாளர்களுக்கான கேப்டன். பந்தை நம்மிடம் வழங்கும் அவர் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என கேட்பார். அந்த சூழ்நிலையில் குறிப்பிட்ட இடத்தில் பீல்டரை நிறுத்த வேண்டும் என நாம் கூறினால் நமது உணர்வுக்கும் திட்டத்துக்கும் ஆதரவாக இருப்பார்.
நாம் வகுக்கும் திட்டம் பலன் அளிக்காவிட்டால், நம்மிடம் மீண்டும் வந்து அவர் கூறும் திட்டத்தை முயற்சி செய்து பார்க்கும்படி ஆலோசனை வழங்கு வார். அவரை பொறுத்தவரையில் பந்து வீச்சாளர்கள் திட்டம் ஏ-வை செயல்படுத்த வேண்டும். அது பலன் கொடுக்கவில்லை யென்றால் திட்டம் பி-யை செயல்படுத்துவார்.
140 கி.மீ. வேகத்தில் ‘அவுட் ஸ்விங்’ பந்துகளை வீசும் திறன் எப்போதும் என் வசம் உள்ளது. ஆனால் ஒரு சில வருடங்களாக இன் ஸ்விங் பந்துகள் வீசுவதில் கடினமாக உழைத்து வருகிறேன். இறுதியாக தற்போது இதில் சிறப்பான நிலைக்கு வந்துள்ளேன். கையில் இருந்து பந்தை விடுவிக்கும் முறையை உணர்ந்துள்ளதால் இது சாத்தியப்பட்டுள்ளது.
இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசும் போது கிரீஸில் இருந்து விலகியே வீசுவேன். அப்போதுதான் சிறந்த கோணத்தில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக செயல்பட முடியும். அதேவேளையில் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்து வீசும்போது ஸ்டெம்புகளுக்கு மிக அருகே வீசுவேன். இதுதான் எங்களது பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவின் ஆலோசனையாகவும் உள்ளது. வார்னருக்கு எதிராக குறைந்த நீளத்தில் பந்து வீச முடிவு செய்துள்ளேன். நமது ஆடுகளங் களில் அவருக்கு எதிராக இதுதான் கைகொடுக்கும். சரியான திசையில் பந்துகளை வீசுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
ஒருசில நாட்களில் 6 முதல் 7 ஓவர்கள் வீசிய உடனே பந்து ஸ்விங் ஆகிறதா இல்லையா என்பது தெரிந்துவிடும். அப்போது நாம் வித்தியாசமாக எதையாவது முயற்சிக்க வேண்டும். அந்த வேளையில் பந்தை தயார் செய்யும் பணியில் அணி கவனம் செலுத்தும். பந்துகளை ‘ஒன் பவுன்ஸ்’ செய்து வீசுமாறு பீல்டர்களை வலியுறுத்துவோம். இதுபோன்ற சிறிய பங்களிப்பு, பந்து ரிவர்ஸ் ஸ்விங்குக்கு ஒத்துழைக்க வழி செய்யும்.
இவ்வாறு உமேஷ் யாதவ் கூறினார்.