விளையாட்டு

3வது ஆஷஸ் போட்டி: சதமடிக்க காத்திருக்கும் கிளார்க், அலாஸ்டர் குக்

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்கும் இங்கிலாந்து கேப்டன் அலாஸ்டர் குக்கும் இந்த முறை சதமடிக்கவிருப்பது ரன்னில் அல்ல, போட்டியில். இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இருவருக்கும் பெர்த்தில் நடைபெறவுள்ள 3-வது ஆஷஸ் போட்டி 100-வது டெஸ்ட் போட்டியாகும்.

32 வயதாகும் கிளார்க் 2004-ல் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். பின்னர் தனது அபாரமான ஆட்டத்திறனால் ஆஸ்திரேலிய கேப்டனாக உயர்ந்த கிளார்க், இதுவரை 99 போட்டிகளில் விளையாடி 26 சதங்களுடன் 7,490 ரன்கள் குவித்துள்ளார்.

இந்த மாதக் கடைசியில் 29 வயதை எட்டவுள்ள அலாஸ்டர் குக், 2006-ல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். ஆண்ட்ரூ ஸ்டிராஸுக்குப் பிறகு இங்கிலாந்தின் கேப்டனாக உயர்ந்த குக், 25 சதங்களுடன் 7,883 ரன்கள் குவித்துள்ளார்.

இது தொடர்பாக இங்கிலாந்து துணை கேப்டன் மட் பிரையர் கூறுகையில், “குக் ஏதாவது சாதனையை முறியடிக்கப் போகிறாரா என்பது குறித்து எதுவும் தெரியாது. எனினும் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சிலரில் அவரும் ஒருவராகப் போகிறார். அவர் இங்கிலாந்தின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்கலாம். இந்தப் போட்டியில் அவர் சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறேன். 100 போட்டிகளில் விளையாடுவது என்பது வியப்பான விஷயம். அவருக்கு எனது வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT