மெல்போர்ன்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வருமானத்தில் மற்ற நாடுகளை விட அதிக பணத்தைப் பெற இந்திய கிரிக்கெட் கவுன்சிலுக்கு (பிசிசிஐ) முழு தகுதி உள்ளது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐசிசி நிர்வாகம் மற்றும் வருவாய் பகிர்வு முறை மாற்றி அமைக்கப்படவுள்ளது. இதில் பிசிசிஐ அதிக பணப் பயன்களைப் பெறுமாறு மாற்றம் கொண்டுவரப்படவுள்ளது. பாகிஸ்தான் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பிசிசிஐ-க்கு ஆதரவாக உள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பின் தலைவர் வெலி எட்வர்ட்ஸ் கூறியுள்ளது:
ஐசிசி வருமானத்தில் 20 சதவீதம் வரை பெற பிசிசிஐக்கு தகுதி உள்ளது. ஏனெனில் வருமானத்தில் 80 சதவீதம் பிசிசிஐ மூலம்தான் கிடைக்கிறது பிசிசிஐயின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை மற்ற நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.