இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள அனில் கும்ப்ளே புதன்கிழமை முதல் தனது பணியை தொடங்கினார். மேற்கிந்தியத் தீவுகளில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்த தொடருக்கான பயிற்சி முகாம் பெங்களுரூவில் தொடங்கியது. இந்த முகாமில் இந்திய அணி வீரர்கள் புதிய பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவின் பார்வையில் பயிற்சியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கும்ப்ளே நிருபர்களிடம் கூறியதாவது:
அணியின் வடிவம் தற்போது எப்படி உள்ளது என்பதை முதலில் கண்காணிப்பேன். பந்து வீச்சாளர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும். அவர்களுடன் நெருக்கமாக செயல்பட்டு அவர்களின் தேவையை அறிந்து கொள்வேன். பந்து வீச்சின் ஒரு பகுதியில் என்னால் பங்களிப்பு செய்ய முடியும். மேலும் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் நியமிக்கவும் ஆலோசித்து வருகிறோம்.
நான் வீரராக இருந்த போது, பந்து வீச்சுக்கு நான் தான் கேப்டன் என்ற உணர்வையே கொண்டிருந்தேன். அதையே தற்போது நான் கற்றுக்கொடுக்க உள்ளேன். அதிலும் முக்கியமாக பந்து வீச்சு துறையில் செயல்படுத்துவேன். இது மிகவும் முக்கியமானது. அனைத்து வீரர்களும் நாம் தான் தலைவர் என நம்ப வேண்டும்.
களத்தில் நிலவும் சவால்களுக்கு தகுந்தபடி அணியை தயார் செய்ய முயற்சி செய்வேன். நானும், துணை பயிற்சியாளர்களும் வீரர்களின் பின்னணியில் இருந்து பணிபுரிவோம். வீரர்கள் தான் முன்னணியில் இருப்பார்கள். வீரராக இருந்த நான் தற்போது பயிற்சியாளராக மாறியுள்ளதால் இரு பணிகளையும் நான் நன்கு அறிவேன்.
பயிற்சியாளர் பணி என்பது கடினமானது தான். அதை நான் புரிந்து வைத்துள்ளேன்.
களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை கேப்டன் தான் முடிவு செய்வார். தேவைப்படும் சமயத்தில் திட்டங்கள் வகுப்பது, தயாராகும் விதங்களில் உதவி செய்வேன். வீரராகவும், கேப்டனாகவும் எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வேன்.
விளையாடும் லெவனை தேர்வு செய்து கேப்டனின் பொறுப்பு தான். பயிற்சியாளராக நான் சிறந்த முறையில் வீரர்களை தயார் படுத்துவேன். ஒவ்வொரு வீரர் உள்ளடக்கிய திட்டங்கள் குறித்தும் கேப்டனுக்கு தெரிவிப்பேன். விளையாடும் வெலனில் உள்ள வீரர்கள் மீது மட்டும் கவனம் செலுத்த மாட்டோம். வெளியில் உள்ள 6 வீரர்கள் மீதும் எங்களது கவனம் இருக்கும்.
நான் ஒரு முறை அணியில் இருந்து நீக்கப்பட்டேன். அணியின் முக்கிய வீரராக இருந்த நான் ஏன் நீக்கப்பட்டேன் என்பதை புரிந்து கொண்டேன். சில சமயங்களில் பயிற்சியாளருடனான தகவல் தொடர்பு பிரச்சினையாக இருக்கும். ஆனால் தற்போது அது குறித்து வீரர்கள் கவலைப்பட வேண்டாம்.
கடந்த முறை மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற தொடரை 3-0 என வென்றோம். இதனால் நம்பிக்கையுடன் டெஸ்ட் தொடரை எதிர்கொள்கிறோம். இம்முறையும் வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளது. கடந்த முறை இஷாந்த் சர்மா தொடர் நாயகனாக தேர்வானார். கோலி, முரளி விஜய், அமித் அமிஸ்ரா ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டனர். அந்த அனுபவம் தற்போது உதவும்.
சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகள் எப்போதுமே நெருக்கடி கொடுக்கும். எனினும் அங்குள்ள சூழ்நிலைகள் இந்தியாவுடன் ஒத்துப்போகும் என்பதால் நிச்சயம் நாமும் சவால் கொடுக்க முடியும். தற்போதைய இந்திய அணி மிகவும் திறமையானது. தோல்வியோ, வெற்றியோ வீரர்களிடம் கடுமையாக போராடும் குணம் உள்ளது. தோனியிடமும் உரையாடி உள்ளேன். அவருடனும், கோலியுடனும் பணிபுரிவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.
இவ்வாறு அனில் கும்ப்ளே கூறினார்.