விளையாட்டு

எனது டெஸ்ட் சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் எளிதில் முறியடிப்பார்: கிளென் மெக்ரா

இரா.முத்துக்குமார்

தற்போது உலகின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளரான இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளுக்கான தனது சாதனையை எளிதில் முறியடிப்பார் என்று கிளென் மெக்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வேகப்பந்து வீச்சாளராக கிளென் மெக்ரா 563 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடம் வகிக்கிறார். மே.இ.தீவுகளின் ‘லெஜண்ட்’ கார்ட்னி வால்ஷ் 519 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடம் வகிக்கிறார், இவருக்கு அடுத்த படியாக தற்போது ஜேம்ஸ் ஆண்டர்சன் 451 விக்கெட்டுகளில் உள்ளார்.

இதனையடுத்து தனது 563 விக்கெட்டுகள் சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் எளிதில் முறியடிப்பார் என்று ஆஸி. லெஜண்ட் கிளென் மெக்ரா புகழாரம் சூட்டியுள்ளார்.

2010-ம் ஆண்டுக்குப் பிறகு ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் போட்டிகளில் 295 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 இடத்தை கடந்த மே மாதம் பிடித்தார்.

இந்நிலையில் கிளென் மெக்ரா கூறியதாவது:

இது ஆண்டர்சனைப் பொறுத்தது, தொடர்ந்து அவர் விளையாடினால் நிச்சயம் எனது சாதனையை எளிதில் கடந்து செல்வார் என்பது உறுதி. நான் அவருக்கு இப்போதே வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறேன். அவர் தரமான வீச்சாளர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. பந்துகள் ஸ்விங் ஆகும் போது உலகில் அவரை எதிர்கொள்பவர்கள் குறைவுதான்.

வேகப்பந்து வீச்சாளராக இருப்பது என்பது உடளவில் பளுவான ஒரு விஷயம். உடற்தகுதியுடன் வலுவாக காயமற்ற ஒரு நிலையை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும். முன்பு அவரிடம் சில குறைபாடுகள் இருந்தன, தற்போது அவர் மீண்டு எழுந்துள்ளார். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆடுவார் என்பது அவரைப்பொறுத்த விஷயம். நான் 37 வயது வரை ஆடியதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். எனவே அவரிடம் வீசுவதற்கு இன்னமும் ஏராளமான ஓவர்கள் கைவசம் உள்ளன.

எப்போதும் அனுபவம் கூடக்கூட எப்படி கையாள்வது என்பது புரிந்து விடும். பேட்ஸ்மென்களை எப்படி ‘ஒர்க் அவுட்’ செய்வதும் தெரிந்து விடும். நெருக்கடி கொடுத்து பேட்ஸ்மென்களை வீழ்த்துவதும் கைகூடத் தொடங்கும்.

இவ்வாறு கூறினார் மெக்ரா.

SCROLL FOR NEXT