விளையாட்டு

2018 ஐபிஎல் தொடரில் புனே அணி இல்லாதது வருத்தமளிக்கிறது: ஸ்டீபன் பிளெமிங்

இரா.முத்துக்குமார்

2017 ஐபிஎல் தொடருடன் புனே அணியின் ஒப்பந்தம் நிறைவுறுவதால் 2018 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் புனே இடம்பெறாது, இதனால் மனம் வருத்தமடைகிறது என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றில் அவர் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது:

சீசன் தொடங்கும் முன்பு பிட்ச் உள்ளிட்ட நிலைமைகளை கணிப்பது பற்றி நான் வலியுறுத்தினேன். ஏனெனில் நாங்கள் மற்றவர்களை விட இதனை சிறப்பாக கணித்து வந்திருக்கிறோம்.

பெரிய நட்சத்திர வீரர்கள் இல்லாவிட்டாலும் நாங்கள் தொடர்ந்து சவால் அளிக்கும் அணியாகவே திகழ்ந்தோம். குறிப்பாக இந்தத் தொடரின் முடிவில் எங்களிடமிருந்த திறமைகளை ஒன்று திரட்டினோம்.

எனவே ஒரு அணியைக் கட்டமைத்து, வீரர்களிடையே பிணைப்பை ஏற்படுத்தி நிறைய நேரமும் மூளையும் இதில் செலவிட்ட பிறகு அடுத்த ஆண்டு இந்த அணி இல்லை என்பதில் வருத்தம் ஏற்படுகிறது.

ஆனால் இதே அணி அடுத்த ஆண்டும் நீடிக்குமானால் நிச்சயம் அடுத்த ஐபிஎல் தொடரில் வலுவான அணியாகவே திகழும்.

இவ்வாறு கூறினார் ஸ்டீபன் பிளெமிங்.

SCROLL FOR NEXT