இலங்கையின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் திலகரத்னே தில்ஷானுக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது. அதில் வியாழக்கிழமை நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியின்போது தில்ஷானின் கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இந்தத் தொடரில் இருந்து தில்ஷான் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக லஹிரு திரிமானி சேர்க்கப்பட்டுள்ளார்.
தில்ஷான் நாடு திரும்புவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் அவர் வரும் 25ம் தேதி வங்கதேசத்தில் தொடங்கவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மார்ச் 16-ம் தேதி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ள நிலையில் தில்ஷான் விஷயத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியம் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காது என தெரிகிறது.