பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக், தற்போதைய ஒருநாள் அணி கேப்டன் சர்பராஸ் அகமட் இடம் தோனியின் அம்சங்கள் இருப்பதாக ஒப்பிட்டுப் பேசியுள்ளார்.
இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் அணி அருமையாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றதையடுத்து பேசிய மிஸ்பா உல் ஹக், “சர்பராஸ் எடுத்த அனைத்து முடிவுகளும் துல்லியமாக அமைந்தன. சர்பராஸ் அகமட் தோனி போன்றவர். உணர்வு அளவில் தோனி போன்றவர் அல்ல, சர்பராஸ் ஆக்ரோஷமானவர், ஆனால் தோனி போல் திட்டங்களை எளிமையாக வைத்துக் கொள்கிறார்.
திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிறப்பாக விளங்குகிறார், மற்ற வீரர்களுக்கு இவரது திட்டங்கள் எளிதில் புரிகிறது.
இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் சென்றுள்ளது, என்னுடைய உணர்வுகளை விளக்க முடியவில்லை, மிகவும் பெருமையாக உள்ளது. சர்பராஸ் அகமட் அபாரமாக கேப்டன்சி செய்தார். அவர் எடுக்கும் முடிவுகள், பந்து வீச்சு மாற்றங்களைச் செய்தது எல்லாமே ஆட்டத்தைத் தாண்டி யோசிப்பவராக எனக்கு சர்பராஸை காட்டுகிறது. இவர் தலைமையின் கீழ் பாகிஸ்தான் அருமையாக ஆடுவதை நினைத்தால் பெருமையாக உள்ளது” என்றார் மிஸ்பா உல் ஹக்.