விளையாட்டு

உலகக் கோப்பை கால்பந்து 2014-ன் தங்க மகன் மெஸ்ஸி

செய்திப்பிரிவு

உலகக் கோப்பை கால்பந்து 2014-ன் சிறந்த வீரருக்கான ஃபிஃபா தங்கப் பந்து விருதை பெற்றார், இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த அர்ஜென்டீனா அணியின் கேப்டனும், நட்சத்திரமுமான லயோனல் மெஸ்ஸி.

இவர், இந்த உலகக் கோப்பை போட்டிகளில் மட்டும் 4 முறை ஆட்டநாயகன் விருது பெற்றார். ஆனால் இறுதிப் போட்டியில் மெஸ்ஸி அவரது மேஜிக்கைக் காட்ட முடியாது போனதே அர்ஜென்டீனாவின் டிராஜிக் ஆனது.

எனினும் ஈரான், போஸ்னியா, சுவிஸ் மற்றும் நைஜீரியாவுக்கு எதிராக இவர் அடித்த கோல்தான் வெற்றிக்கு வித்திட்டது. இதுவே, அவருக்கு தங்கப்பந்து விருதைப் பெற்றுத் தந்துள்ளது.

மொத்தத்தில் 2010 உலகக் கோப்பையைக் கட்டிலும், மெஸ்ஸி இந்த உலகக் கோப்பையில் முத்திரையை ஓரளவுக்குப் பதித்தார் என்றே கூற வேண்டும்.

இந்த விருதுக்கு அர்ஜென்டீனாவின் டி மரியா, ஜேவியர் மஸ்சரானோ ஆகியோரும் போட்டியில் இருந்தனர். ஜெர்மனியிலிருந்து ஹமெல்ஸ், முல்லர், குரூஸ், பிலிப் லாம் ஆகியோர் இருந்தனர். ஆனால், ஷுஅய்ர்லி இல்லாதது ஆச்சரியமே. பிரேசிலில் இருந்து நெய்மார் மட்டுமே இந்தப் பட்டியலில் இருந்தார். அர்ஜென் ராபின் ஹாலந்து அணியிலிருந்து இடம்பெற்றிருந்தார்.

இந்த உலகக் கோப்பையில் 6 கோல்கள் அடித்த கொலம்பியாவின் ரோட்ரிகஸ் - அதிக கோல்களுக்கான கோல்டன் பூட் விருதைப் பெற்றார்.

சிறந்த கோல் கீப்பருக்கான கோல்டன் கிளவ் விருது, ஜெர்மனியின் நூயருக்கு வழங்கப்பட்டது.

பிரான்சின் பால் போக்பா, உலகின் சிறந்த இளம் வீரர் விருதைப் பெற்றார்.

மேலும், நகைச்சுவையா அல்லது முரணா என்று அறுதியிட முடியாத ஃபிஃபாவின் ஒரு முடிவில், ஃபேர் பிளே (Fair play) விருதை கொலம்பியாவுக்குக் கொடுத்துள்ளனர்.

நெய்மாரின் முதுகு காயத்திற்குக் காரணமாகி, பிரேசில் அணியின் சீரழிவுக்குக் காரணமான கொலம்பியாவுக்கு நியாயமான ஆட்டத்திற்கான விருது எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்று தெரியவில்லை.

SCROLL FOR NEXT