விளையாட்டு

தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கி: சென்னையில் 24-ம் தேதி தொடங்குகிறது

செய்திப்பிரிவு

4-வது தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கிப் போட்டி வரும் 24-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. இதை தமிழ்நாடு ஹாக்கி யூனிட் நடத்துகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு ஹாக்கி யூனிட் அமைப்பின் தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் ரேணுகா லட்சுமி, போட்டி அமைப்பு குழு தலைவர் நந்தகுமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:

4-வது தேசிய ஜூனியர்

ஆடவர் ஹாக்கிப் போட்டியை நடத்தும் வாய்ப்பை ஹாக்கி இந்தியா தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. 34 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டி, சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானம், சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானம் ஆகியவற்றில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் மொத்தம் 680 வீரர்களும், 35 தொழில்நுட்ப அலுவலர்களும் பங்கேற்கவுள்ளனர். இந்தப் போட்டிகள் “ஏ” டிவிசன், “பி” டிவிசன் என இரு பிரிவுகளாக நடத்தப்படுகின்றன. தரவரிசை அடிப்படையில் முதல் 16 இடங்களில் உள்ள அணிகள் “ஏ” டிவிசனிலும், எஞ்சிய அணிகள் “பி” டிவிசனில் இடம்பெற்றுள்ளன. தமிழக அணி “ஏ” டிவிசனில் இடம்பெற்றுள்ளது.

இரு டிவிசன்களிலும் உள்ள அணிகள் தலா 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். “பி” பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் இரு அணிகள் அடுத்த ஆண்டில் “ஏ” டிவிசனில் விளையாடத் தகுதிபெறும்.

இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழக அணியைத் தேர்வு செய்வதற்கான பயிற்சி முகாம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் 35 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதிலிருந்து 25 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு திருச்சியில் 10 நாள் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. அதிலிருந்து 18 பேர் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர். தமிழக அணியின் பயிற்சியாளராக சார்லஸ் டிக்சனும், மேலாளராக செந்தில் ராஜ்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் சீனியர் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி, பயிற்சியாளர் திருமாவளவன் தலைமையில் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவிற்கும், சீனியர்

மகளிர் ஹாக்கிப் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி, பயிற்சியாளர்

ரோஸ் பாத்திமா மேரி தலைமையில் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலுக்கும் இன்று புறப்பட்டுச் சென்றது. ஆடவர் அணி “ஏ” டிவிசனிலும், மகளிர் அணி “பி” டிவிசனிலும் இடம்பெற்றுள்ளன.

ஜூனியர் மகளிர் ஹாக்கிப் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி, “ஏ” டிவிசனில் இடம்பெற்றது. இந்தப் போட்டி மைசூரில் நடைபெறுகிறது என்றனர்.

SCROLL FOR NEXT