இலங்கைக்கு எதிராக ரோஹித் சர்மா எடுத்த 264 ரன்கள் என்ற ஒருநாள் கிரிக்கெட் உலக சாதனையை முறியடிப்பது கடினம் என்று மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
ஹெரால்ட் சன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் லாரா கூறியது:
"மான்செஸ்டர் மைதானத்தில் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் எடுத்த 189 ரன்கள் என்ற சாதனையுடன் கிரிக்கெட்டில் வளர்ந்தவர்கள் நாங்கள். அன்று அவர் பந்து வீச்சை எவ்வாறு ஆதிக்கம் செலுத்தினார் என்பது பற்றி நாங்கள் போதிக்கப்பட்டோம். அப்போது இந்த ஸ்கோர்தான் உலக சாதனை. சில ஆண்டுகளுக்கு முறியடிக்க முடியாமல் நிலைபெற்றது.
அப்போதெல்லாம் 200 எடுக்க முடியும் என்றே நான் உணர்ந்தேன். ஆனால், இப்போது ரோஹித் சர்மாவின் 264 ரன்கள் என்ற உலகசாதனை இப்போதைக்கு எட்ட முடியாத ஒன்று என்றே என்னை நினைக்கத் தூண்டுகிறது. இது மிகவும் விதிவிலக்கான அபாரமான ஆட்டத்திறன், இவ்வளவு ஸ்கோருக்குப் பிறகு அவர் ஆட்டமிழந்திருக்கிறார். இது சிறப்பான இன்னிங்ஸ். இதனைக் கடந்து செல்வது மிக மிகக் கடினமே.
அன்று ரோஹித் 200 ரன்களை எடுத்த போது ஒருநாள் கிரிக்கெட்டில் இருமுறை இரட்டை சதம் என்று ஆச்சரியமடைந்தேன். ஆனால் சாத்தியமில்லாத ஒரு அளவுக்கு அன்று அவரது ரன் எண்ணிக்கை செல்லும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
என்னிடம் அடிக்கடி கேட்கப்படுகிறது, டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னுடைய 400 ரன்கள் சாதனை முறியடிக்கப்படுமா என்று. இதற்கு ஆம் என்றே கூறுவேன். 20 ஓவர் கிரிக்கெட்டின் தாக்கம் அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் பாயும் நிலையில், கிறிஸ் கெய்ல், விராட் கோலி போன்றவர்கள் பேட் செய்யும் விதத்தைப் பார்க்கும் போதும், ஒரு நல்ல பேட்டிங் ஆட்டக்களத்தில் இவர்களைப் போன்ற வீரர்கள் 2 நாட்கள் நிற்க முடிந்தால் எதுவும் சாத்தியமே.
டி20 கிரிக்கெட் வீரர்களின் தன்னம்பிக்கையை பெரிய அளவுக்கு வளர்த்துள்ளது என்றே நான் கருதுகிறேன்.” இவ்வாறு லாரா கூறியுள்ளார்