விளையாட்டு

ஆஷஸ்: 2-வது டெஸ்டிலும் ஆஸ்திரேலியா வெற்றி

செய்திப்பிரிவு

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா 218 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-0 என்கிற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.

கிரிக்கெட்டி போட்டிகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடராக கருதப்படுகிறது ஆஷஸ் கிரிக்கெட் தொடர். எப்படி இந்தியாவுக்கு, பாகிஸ்தானுடனான ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் பெறுகிறதோ, அப்படியொரு டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவுக்கும் - இங்கிலாந்துக்கும் இடையேயான இந்த ஆஷஸ்.

இப்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்றும் வரும் இந்த வருடத்திற்கான ஆஷஸ் தொடரில், இப்போது ஆஷஸ் கோப்பையை தன் வசம் வைத்திருக்கும் இங்கிலாந்து, அடுத்தடுத்து படு தோல்விகளை சந்திதுள்ளது.

இந்த முறையும் தொடரை வெல்வார்கள் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்கியது இங்கிலாந்து. ஆஸ்திரேலியாவோ, ஆஷஸுக்கு முன் நடந்த 9 டெஸ்ட் போட்டிகளில் 7-ல் தோல்வி கண்டு, ஒரு போட்டியிலாவது வெல்வார்களா என்ற சந்தேகத்துடனேயே களம் இறங்கினர். இப்போதைய நிலை அப்படியே தலைகீழாக உள்ளது.

இரண்டாவது டெஸ்டில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய சூழலில் விளையாடிய இங்கிலாந்து அணியால் டாஸை வெல்ல முடியவில்லை. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 570 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் 148 ரன்களும், விக்கெட் கீப்பர் ஹாடின் 118 ரன்களும் எடுத்தனர். அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியின் வீரர்களால் ஜான்ஸனின் பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் போனது. அந்த அணியின் கார்பெர்ரி, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த பெல் ஆகியோர் அரை சதங்கள் அடித்தாலும், மற்ற எவரும் சரியாக பேட்டிங் செய்யாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்க்ஸில் 172 ரன்கள் மட்டுமே எடுத்து, இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மிட்சல் ஜான்ஸன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

ஆனால் ஆஸ்திரேலியா, 398 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தும் ஃபாலோ ஆன் கொடுக்காமல் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது. அந்த அணியின் வார்னர் 83 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்க்ஸில், 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

இரண்டு முழு நாட்களின் ஆட்டம் மிச்சமிருக்கையில், 531 ரன்கள் என்கிற வெற்றி இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை இங்கிலாந்து துவக்கியது.

ஜோ ரூட், பீட்டர்ஸன், ப்ரையர் மட்டுமே அரை சதங்களைக் கடந்தனர். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 4வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 247 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 5 வது நாள் ஆட்டம் துவங்கி, பதினோரு ஒவர்களிலேயே, 312 ரன்கள் இருந்த நிலையில், மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்தது இங்கிலாந்து. இரண்டாவது இன்னிங்க்ஸில், ஆஸ்திரேலியாவின் சிட்டில் மற்றும் ஹாரிஸ் இருவரும் தங்களுக்குள் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால், ஆஸ்திரேலியா 218 ரன்கள் வித்தியாசத்தில் அசாதாரண வெற்றி பெற்றது. மிட்சல் ஜான்ஸன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தாங்கள் செய்ய வேண்டியது இன்னும் நிறைய உள்ளன என்றும், டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தை மீண்டும் பெறுவதே தங்கள் அணியின் லட்சியம் என்றும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கல் கிளார்க் கூறியுள்ளார்.

இங்கிலாந்தின் கேப்டன் குக், "ஜான்சனின் பந்து வீச்சை சமாளிக்க கற்றுக் கொள்ளவேண்டும், முதல் நாள் நன்றாக ஆடியும், அடுத்த நாட்களில் கிடைத்த வாய்ப்புகளை பயனபடுத்திக் கொள்ளவில்லை. நாங்கள் இன்னும் நன்றாக உழைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்

இதுவரை, இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு ஆஷஸ் தொடரில் சரிவிலிருந்து இங்கிலாந்து மீண்டதில்லை என சரித்திரம் சொல்கிறது. மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில், அந்த அணியின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

SCROLL FOR NEXT